யாழ்.மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டங்களைத் தொடர்ந்தும் நோர்வே அரசாங்கம் முன்னெடுக்குமென நோர்வே உறுதியளித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”இச்சந்திப்பின் போது, யாழ்.மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.
அத்துடன், அண்மைக் காலங்களில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வாதார திட்டங்கள் எவை என்பது பற்றியும், விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொடர்பிலும் அவர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கினைத் தவிர்ந்த அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
மக்களின் வாழ்வாதார திட்டங்கள் வழங்குவது தொடர்பில் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தூதுவர் உறுதியளித்துள்ளார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள எமது புலம்பெயர் மக்கள் இங்குள்ளவர்களுக்கு உதவி புரிவது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்குரிய சலுகைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனச் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அனைத்து விடயங்களையும் ஆராய்ந்ததுடன், மயிலிட்டி துறைமுகம் மற்றும், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மீனவக் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்தும் நோர்வே தூதுவர் குழுவினர் ஆராயவுள்ளனர்” என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.