வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறிட் லோஷன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று காலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், ‘வடக்கில் ஐ.நா.வின் உதவித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன. அத்துடன் ஏனைய மாகாணங்களில் உள்ள பிரச்சினையை விட மாறுபட்ட பிரச்சினைகள் வடமாகாணத்தில் உள்ளதென தூதுவரிடம் சுட்டிக்காட்டினேன்’ என்றார்.
‘போரின் பின்னர் வடபகுதியில் இருக்கும் 49 ஆயிரம் விதவைகளின் வாழ்க்கையில் எவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்பதுடன், வடபகுதியில் வெவ்வேறு விதங்களில் பல இடர்பாடுகளும், கலாசார சீரழிவுகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன என்று அவரிடம் எடுத்துரைத்தேன்’ என்றார்.
அத்துடன், ஐ.நா.விடமிருந்தும், இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் பொருளாதார ரீதியாக வடபகுதி மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அவரிடம் வலியுறுத்தினேன்.
மேலும், வருங்காலத்தில் எங்களுக்கும் ஐ.நா மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறுமென்று எதிர்பார்ப்பதாக’ நோர்வே தூதுவரிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.