நோர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு

சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்தாக கூறப்படும் நோர்தன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், தெரிவித்தார்.

அமைச்சருடன் கொழும்பில் மேற்கொண்ட சந்திப்பில் அமைச்சர் இந்த முடிவை அறிவித்ததாக அவர் கூறினார்.

நோர்தேன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய், பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டமையால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளாக மல்லாகம், தெல்லிப்பழை, புன்னாலைக்கட்டுவன் அளவெட்டி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள 800க்கும் மேற்பட்ட கிணறுகளில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டன.

இது தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நடந்துவரும் அதேவேளை, பல்வேறு கண்டன போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

வடமாகாண சபையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, எண்ணெய் கசிவு தொடர்பான ஆய்வு இடம்பெற்று வருகின்றது.

இதனைவிட ஐப்பான் அரசாங்கம் இதற்கு உதவி செய்வதாகவும், அதற்கு பாதிப்பு தொடர்பாக அறிக்கை தருமாறு ஐப்பான் தூதுவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரியிருந்தமைக்கமைய, வடமாகாண சபையால் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம் வியாழக்கிழமை(22) நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தியிருந்தது. எண்ணெய் கசிவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டம் குறித்தும் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் நிறுவனத்தை மூடுவதற்கு உத்தரவிட்டதுடன், இதனால் யாழ்ப்பாணத்துக்கான மின்சார விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது எனக்கூறினார்.

இந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆலோசகர் கலாநிதி ராம் மாணிக்கலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம் சார்பாக அதன் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், உபதலைவர் எஸ்.வேலாயுதம், செயலாளர் என்.நிகேதன், பொருளாளரும் சட்டத்தரணியுமான ஜெ.ஜெயரூபன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.-

Related Posts