நோய் நிலைமையை கட்டுப்படுத்த ஆளுநர் பணிப்பு

வட மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படும் பட்சத்தில் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வட மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று(11) மாலை வரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருமாக இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் ஆளுநர் தொலைபேசியூடாக நேற்று கலந்துரையாடியுள்ளார்.

உயிரிழப்புகளுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மாதிரிகள் கொழும்பு மற்றும் கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வேறு வைரஸ் தொற்றுக்களாக இருக்கக்கூடும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருப்பதாகவும் அது தொடர்பான விபரங்களையும் ஆளுநரிடம் தெரிவித்த அவர் இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து இரண்டு குழுக்கள் இன்றும் நாளையும் வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பு மருந்துகள் வேறு மாவட்டங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அதேபோன்று ஒரு தொகுதி மருந்துக்கு கொழும்பு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த தடுப்பு நடவடிக்கைகளை வைத்தியசாலை தரப்பினர் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிப்புறாத ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவிலிருந்து மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்களைப் பெற்று அவற்றை வினைத்திறனுடன் மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியு்ளார்.

Related Posts