நோயாளிகளை மேலும் நோயாளர்களாக்கும் யாழ். போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையின் செயற்பாடுகள் நோயாளர்களை மேலும் நோய்களுக்கு உள்ளாக்குகின்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் அசட்டையாகவே செயற்படுவதாகவும் மக்கள் சாடியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானவர்கள் உணவுக்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் இருக்கும் இந்த சிற்றுண்டிச்சாலையையே நம்பியுள்ளனர்.

ஆனால் இந்த உணவு விடுதியோ அந்த நோயாளர்களுக்கு பழுதடைந்த உணவுப் பார்சல்களை விற்பனை செய்கிறது. இதனால் அந்த உணவுகளை உண்ணும் நோயாளிகள் மேலும் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

அத்துடன் பெரும் துன்பங்களுக்கும் உள்ளாகின்றனர். அண்மையில் விற்பனைக்குத் தயாராக இருந்த பழுதடைந்த உணவுப் பொருள்களை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றிய போதும் அதன் பின்னர் சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உணவுப் பொருட்களை வாங்க நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் அதேநேரம் அவர்களுக்க வழங்க வேண்டிய மீதிப் பணத்தை வழங்காமல் ‘ரொபி’, ‘சொக்லேட்’ போன்றவையே வழங்கப்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

“உணவு விடுதியில் உணவு வாங்குவோர் மீதிப்பணத்தை கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறும், ரொபி போன்றவற்றை வழங்கினால் ஏற்க வேண்டாம்” என வைத்தியசாலைப் பணிப்பாளரின் அறிவுறுத்தல் ‘நோட்டீஸ்’ ஒட்டப்பட்டுள்ளபோதும் மீதிப் பணம் கேட்பவர்களுக்கு சிற்றுண்டிச்சாலையில் இருப்பவர்கள் சில்லறை இல்லை என்ற பதிலையே வழங்குகின்றனர் எனக் கூறப்படுகின்றது.

எனவே இந்த விடயங்களில் வைத்தியசாலை நிர்வாகம் உடன் கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts