தெளிவான நோக்கம் இன்றி கூட்டு எதிரணியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
பணம் மற்றும் போதைப் பொருட்களை வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த போராட்டத்தில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியின் பேரணியில், மது போதையில் இருந்த 81 ஆர்ப்பாட்டக்காரர்கள், அவர்கள் எதிர்த்த இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அம்புலன்ஸ் மூலம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் நகைச்சுவையாக தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நேற்று (புதன்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் திடீரென நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
என்றும் இல்லாத அளவிற்கு பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிரணியினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இங்கு மே தின கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை விட மிக சொற்ப மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு மக்கள் மத்தியில் இந்த போராட்டம் தொடர்பில் எவ்வித உணர்வுகளும் காணப்படவில்லை என தெரிவித்தார். அத்துடன் குறித்த தலைவர்கள் அந்த மக்களுக்கு உணவு, மது, பணம் தருவதாக கூறி அழைத்து வந்துவிட்டு தற்போது அவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
இந்த போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுள் ஆட்சியை கலைக்க, பாண் விலையை குறைக்க என்று பல்வேறுபட்ட நோக்கங்களை கொண்டு இருந்தமையால், ஒருமனதாக போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் சென்றுள்ளது.
மேலும் அதிக பணத்தை செலவழித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்த போதிலும் அது தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாகவும் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.