சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படும் இலங்கை மின்சார சபையின் நொர்தேன் பவர் நிறுவனத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தல் தொடர்பான கட்டளையை உருவாக்குதல் தொடர்பில், எதிர்வரும் 27ஆம் திகதி கூறப்படும் என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், கூறினார்.
கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்படுவது குறித்து பாதிக்கப்பட்ட 11 பேர் நொர்தேன் பவர் நிறுவனத்துக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நேற்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு முடிவடையும் வரையில் நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிறுவனத்தை தற்காலிகமாக மூடவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரினார்கள்.
இடைக்கால தடை கட்டளை பிறப்பிப்பதா இல்லையா என்ற அறிவித்தல் 27ஆம் திகதி கூறப்படும் என நீதவான் கூறினார்.
நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றத்துக்கு நியாய ஆதிக்கம் இல்லையென, நொர்தேன் பவர் நிறுவனம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறினார்கள்.
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதவான், வழக்கை நீதிமன்றத்தில் எடுத்து வாதாடுவதற்கு நியாயமான காரணம் மற்றும் அதிகாரம் உள்ளது எனக்கூறினார்.
வழக்கு விசாரணை முடிவடைந்ததும், நீதவான், அதிகாரிகள், சட்டத்தரணிகள் ஆகியோர் நேரில் சென்று நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்தை சென்று பார்வையிட்டனர்.