நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நஜாபா என்ற அந்தக் கிராமத்திற்குள் புகுந்த துப்பாக்கிதாரிகள், வீடுகளைப் பார்த்துச் சுட்டனர். பிறகு கிராமத்திற்குத் தீ வைத்தனர் என இந்தத் தாக்குதலில் தப்பியவர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை காலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துவிட்டாலும், அந்தப் பகுதி உள்ளடங்கிய பகுதி என்பதால், தற்போதுதான் அந்தத் தாக்குதல் குறித்து வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது.
இஸ்லாமிய அரசை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆயிரக் கணக்கான மக்களை போகோ ஹராம் கொலை செய்து வருகிறது.
ஆண்களையும் ஆண் குழந்தைகளையுமே துப்பாக்கிதாரிகள் குறிவைத்துத் தாக்கியதாக சஹாரா ரிப்போர்ட்டர்ஸ் என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.
“எல்லாப் பக்கமும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது” என இந்தத் தாக்குதலில் தப்பிய ஃபாத்திமா அபக்கர் தெரிவித்துள்ளார்.
“நான் ஒரு புதருக்குள் ஓடி ஒளிந்துகொண்டேன். அதற்குப் பிறகு நான் என் கணவரையோ, மூன்று குழந்தைகளையோ பார்க்கவில்லை. மதியத்திற்கு மேல் கிராமத்திற்குத் திரும்பிவந்து பார்த்தபோது, எங்கு பார்த்தாலும் சடலங்கள் சிதறிக் கிடந்தன” என்கிறார் அவர்.
மாகாணத் தலைநகரான மைதுகுரியிலிருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் நஜாபா அமைந்திருக்கிறது.
போர்னோ மாகாணத்தில் பெரும்பகுதியை போகோ ஹராம் கட்டுப்படுத்திவருகிறது. சமீப காலமாக அருகில் இருக்கும் சத், கேமரூன், நைஜர் நாடுகளின் மீதும் எல்லையைக் கடந்து தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த மூன்று நாடுகளும் தற்போது நைஜீரியாவுடன் இணைந்து, போகோ ஹராமுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக நடந்த யுத்தத்தின் முடிவில் பல நகரங்களை இந்தக் கூட்டுப் படையினர் மீட்டுள்ளனர்.