நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தை வேண்டுமென்றே புறக்கணித்தாரா? அமைச்சர் டக்ளஸ்

daklausமாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை அதாவது 13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி பொதுச்செயலரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை.

மிகமுக்கியமான முடிவெடுக்கும் இந்தக் கூட்டத்தை டக்ளஸ் தேவானந்தா வேண்டுமென்றே புறக்கணித்தாரா அல்லது, அதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதற்காக நழுவினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் தனது கருத்து எடுபடாது என்பதாலும், தான் வெளியிடும் கருத்து அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும் டக்ளஸ் தேவானந்தா நல்லபிள்ளையாக ஒதுங்கி கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதேவேளை, அமைச்சரவையில், இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவும் இல்லாத நிலையிலேயே நேற்று 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், பங்கேற்று இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தவறிய டக்ளஸ் தேவானந்தா, நேற்றிரவு பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றில், இந்த நிலைமைக்கு கிடைத்த வாய்ப்புகளை நழுவவிட்ட தமிழ்த் தலைமைகளும் பொறுப்பு என்று பொறுப்பற்ற விதமாகப் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் யோசனைக்கு ரவூப் ஹக்கீமுடன், இணைந்து இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இடதுசாரி அமைச்சர்கள் மூவரும் அமைச்சரவை மனுவொன்றை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருப்பினும் தமது ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்றும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 13வது திருத்தத்தை திருத்தும் சட்டமூலம் நிறைவேற்றிக் கொள்வோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல நேற்றைய ஊடக மாநாட்டில் தெரிவித்தமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts