நேற்று ரஜினி பட வசனம், இன்று தனுஷ் பட வசனம்

ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், கார்த்தி என வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் சேர்ந்து தானும் வளர்ந்தவர் இயக்குனர் ராஜேஷ். ‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களின் வெற்றி அவரை வெகு வேகமாக உச்சத்திற்குக் கொண்டு போனது. அதே வேகத்தில் ‘அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் அடுத்தடுத்த தோல்விகள் அவரைக் கீழிறிக்கினாலும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ பட வாய்ப்பு அவரைக் காப்பாற்றியுள்ளது.

மற்ற எந்த ஹீரோக்களும் அவருடன் நடிக்கத் தயாராக இல்லாத நிலையில் தன்னுடைய இயக்கத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும், சந்தானத்தாலும் தனக்கு வெற்றி கிடைப்பதாகப் பலர் சொல்லிக் கொண்டிருந்ததாலும் தன்னை நிரூபிக்க அவர் தற்போது கடவுளை நம்ப ஆரம்பித்திருக்கிறார்.

தனுஷை தன்னுடைய நிரந்தர எதிரியாகப் பார்க்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது ‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷ் பேசிய பாப்புலர் வசனமான ‘கடவுள் இருக்கான் குமாரு’ வசனத்தைத் தலைப்பாக வைத்துள்ள படத்தில் மட்டும் எப்படி நடிக்க சம்மதித்தார் என தனுஷ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். டிவிட்டரில் தன்னை எதிர்க்கும் தனுஷ் ரசிகர்களைச் சமாளிக்க, பணம் கொடுத்து ஒரு ‘பூச்சிப்’ படையை உருவாக்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இன்று ஹாலிவுட் வரை உயர்ந்து நிற்கும் தனுஷின் வளர்ச்சி ‘கொல வெறி’யால் வந்ததால், மேலும் கோடிகள் செலவு செய்தாவது ‘ஹாலிவுட்’ வரை தானும் செல்ல ஆசைப்படுகிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற ரஜினியின் பட வசனத்தை தலைப்பாக வைத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த ஜி.வி. அடுத்து அவரின் மாப்பிள்ளை தனுஷின் பட வசனத்தை தலைப்பாக வைத்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் படப்பிடிப்பை இன்று ஆரம்பிக்கிறாராம்.

Related Posts