தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோஷா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இராப்போசன விருந்துடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதியும் ரமபோஷாவும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது பேச்சுவார்த்தைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும். இதன் மூலமே சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை காணமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எடுத்துக்கூறியதாக தெரிகின்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதுடன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுத்தால் சாதகமான நிலை தோன்றும். இவ்வாறு கூட்டமைப்புடன் நேரடிப்பேச்சுவார்த்தைகள் நடத்துவது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன என்று ரமபோஷா ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகின்றது.
நேரடிப்பேச்சுக்களை ஆரம்பிப்பதுடன் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது பற்றி முதலில் அறியவேண்டும். அதன் பின்னரே இது குறித்து தீர்மானிக்கலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் போது கூட்டமைப்பினர் இணக்கம் தெரிவித்தால் நேரடிப்பேச்சுக்கு இணங்குவீர்களா என ரமபோஷா கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்து சிந்திக்கலாம் என்று ஜனாதிபதி பதிலளித்ததாகவும் தெரிகின்றது.