வணிக ரீதியான படங்களின் ஜாம்பவான் என்கின்றனர் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரை. ரசிகர்களின் நாடி துடிப்பு அறிந்தவர். காதல், நகைச்சுவை, குடும்ப பாசம், அதிரடி என அனைத்து விஷயங்களையும் கலந்து படம் பார்ப்பவர்களை கட்டிப்போடுவதில் கில்லாடி.
இவர் இயக்கும் படங்கள் லாபத்துக்கு உத்தரவாதம் தருபவை என்று தயாரிப்பாளர்களின் டைரக்டராகவும் பார்க்கப்படுகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித்குமார், சரத்குமார், மாதவன், அர்ஜூன், பிரபு, கார்த்திக், தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, இந்தியில் சஞ்சய்தத் என்று இவர் படத்தில் நடித்த கதாநாயகர்கள் எண்ணிக்கை நீள்கிறது.
கே.எஸ்.ரவிகுமாருடன் ஒரு சந்திப்பு:-
டைரக்டர் ஆனது சிறு வயது கனவா? எதேச்சையாக நடந்ததா?
எதேச்சையாகத்தான் நடந்தது. டைரக்டர் ஆவேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. சிறு வயதில் சினிமா பிடிக்கும். நான் சிவாஜி கணேசன் ரசிகன். அவரது படங்களை தியேட்டரில் பார்ப்பேன். ரஜினி, கமல் படங்களையும் விரும்பி பார்ப்பது உண்டு. அதன்பிறகு சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் தமிழ் படங்களை திரையிடும் உரிமை பெற்று அந்த நாடுகளுக்கு படங்களை வாங்கி அனுப்பி வைக்கும் தொழில் செய்தேன். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே திருட்டு சி.டி.க்கள் அங்கு பரவியதால் தியேட்டருக்கு கூட்டம் வராமல் நஷ்டம் ஏற்பட்டது. அந்த தொழிலை கைவிட்டேன். அடிக்கடி சினிமா படப்பிடிப்புகளை நான் பார்ப்பது உண்டு. நண்பர்கள் டைரக்டராகும்படி தூண்டியதால் இணைந்த கோடுகள் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன். பிறகு ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் டைரக்டராகி விட்டேன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் பணியாற்றிய அனுபவங்கள்?
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் திரையுலகின் சகாப்தங்கள். தியேட்டர்களில் அவர்களின் படங்களை பார்த்து விசிலடித்து ரசித்து இருக்கிறேன். ரஜினிகாந்த் மாஸ். கமல்ஹாசன் கிளாஸ். அவர்களை வைத்து படங்கள் இயக்கியது மகிழ்ச்சியான விஷயம். இதன் மூலம் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு இப்போது நெருக்கமாகி விட்டோம்.
உங்கள் படங்களில் நடித்த நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா பற்றி?
நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா மூவருக்குமே சில நல்ல குணங்கள் உள்ளன. அதனால்தான் உயர்ந்த நிலைக்கு வந்து இருக்கிறார்கள். நயன்தாரா மனித நேயம் உள்ளவர். யாருக்கேனும் பிரச்சினை என்று கேள்விப்பட்டால் தனது உதவியாளரை அனுப்பி உதவி செய்வார். படப்பிடிப்பு குழுவினருக்கு பிரச்சினைகள் வந்தாலும் உதவக்கூடிய நல்ல குணம் படைத்தவர்.
அனுஷ்கா ஆன்மிக சிந்தனை உள்ளவர். யோகா, தியானத்தில் ஈடுபாடு உள்ளவர். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பார். மற்றவர்களுக்கும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று ஆலோசனைகள் சொல்வார். பிறர் நலனிலும் அக்கறை காட்டுவார். நடிகர் நாசர் மகன் விபத்தில் சிக்கிய தகவலை கேள்விப்பட்ட போது படப்பிடிப்பில் இருந்த அவர் அழுது விட்டார். அடிக்கடி போன் செய்து உடல் நிலை குறித்து விசாரித்துக்கொண்டே இருந்தார். படப்பிடிப்பு குழுவினர் அடிபட்டாலும் வருந்துவார்.
திரிஷா நல்ல நடிகை. சுதந்திரமான உணர்வு அவருக்கு சாஸ்தி. யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். எதற்கும் பயப்படாத துணிச்சலும் உண்டு. வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு சென்ற போது யாருடைய துணையும் இல்லாமல் தனியாக தைரியமாக வெளியே சுற்றி விட்டு வந்தார்.
நீங்கள் இயக்கிய தசாவதாரம், அவ்வை சண்முகி படங்கள் மேக்கப் நுணுக்கத்தில் பேசப்பட்டன. எப்படி அந்த படங்களை எடுக்கும் துணிச்சல் வந்தது.?
கமல் தந்த துணிச்சல்தான் அதற்கு காரணம். ஒருநாள் படப்பிடிப்பில், இந்தியன் படத்தில் அவர் தோன்றும் வயதான தோற்றம் ஸ்டில்லை என்னிடம் காட்டி இதில் இருப்பது யார் என்று கேட்டார். எனக்கு அடையாளம் தெரியவில்லை. அதன்பிறகு அதில் இருப்பது நான்தான் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். அதோடு இதுபோல் வித்தியாசமான தோற்றத்தில் அவ்வை சண்முகி படத்தை எடுக்கும்படி என்னை தூண்டினார். நான் தயங்கினேன். உங்களால் முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டி என்னை இயக்க வைத்தார். அதுபோல் 10 வேடங்களில் தசாவதாரம் படத்தை இயக்க நான் தயங்கியபோதும் என்னை தைரியப்படுத்தி எடுக்க வைத்தார்.
இளம் இயக்குனர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை?
இளம் டைரக்டர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஆனாலும் சினிமா இப்போது போட்டி நிறைந்த தொழிலாக மாறி விட்டது. இதில் நிலைக்க வேண்டுமானால் அனுபவமும் பயிற்சியும் கண்டிப்பாக தேவை. குறும்படங்கள் எடுத்து டைரக்டர்களானவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ்வதாக கருதுகிறீர்களா?
சுதந்திரத்துக்கு முன்பு அந்நியர்களின் அதிகாரத்தில் அடிமைகளாக இருந்தோம். இப்போது நம்மால் தேர்வு செய்யப்பட்டவர்களின் ஆட்சி அதிகாரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பு நம்மவர்களில் சில எட்டப்பர்கள் இருந்ததுபோல் இப்போதும் சில எட்டப்பர்களும், கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் வாழ்க்கையை படமாக்குவதாக இருந்தால் யார் வாழ்க்கையை படமாக்குவீர்கள்?
சுதந்திர தியாகிகள் பலரது வாழ்க்கை படமாக்கப்பட்டு விட்டது. எனக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கையை, ஜனரஞ்சகமாக படமாக்க ஆர்வம் உள்ளது. அவரைப்பற்றிய நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வர்த்தக ரீதியாக சொன்னால் விறுவிறுப்பாக இருக்கும்.