சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சர்ச்சைக்குரிய மரணம் குறித்த, புதிய தகவல்களை வெளியிட்டு வரும், பிரித்தானிய இணையதளம், அவரது உடல் எரியூட்டப்பட்டதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் தொடர்பான விஷயத்தில், மர்மம் நீடித்து வருகிறது.
சமீபகாலமாக, ´நேதாஜியின் இறுதி நாட்கள் பற்றிய உண்மையை வெளியிட வேண்டும்´ என, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரித்தானியாவைச் சேர்ந்த, ´போஸ் பைல்ஸ் இன்போ´ என்ற இணையதளம், நேதாஜியின் மரணம் தொடர்பான தகவல்களை, அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தாய்வான் விமான விபத்தில் பலியான நேதாஜியின் உடலை, ஜப்பானுக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல முடியவில்லை. தலைநகர் தைபேயில், அவரது உடல் எரியூட்டப்பட்டது. கடந்த, 1945, ஆகஸ்ட், 22ல், நேதாஜியின் உடலுடன், ஜப்பான் அதிகாரியும், மற்றொரு இந்தியரும் சுடுகாட்டிற்கு சென்றனர். அந்த இந்தியர், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த ஹபிபூர் ரகுமானாக, இருக்கலாம்.
அவர்கள் இருவரும், நேதாஜியின் இறப்பு சான்றிதழை, டான் டி – டி என்ற, தாய்வான் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதற்கு அடுத்த நாள், உடல் எரியூட்டப்பட்ட சாம்பலையும் பெற்றுச் சென்றனர். இந்த தகவல்கள் தாய்வான், ஆவணங்களில் பதிவாகியுள்ளன. இதே தகவல்கள், 1956ம் ஆண்டு, பிரிட்டன் வெளியுறவுத்துறையின் ஆவணங்களிலும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தேசிய இராணுவத்தை நிறுவி, ஜப்பான் இராணுவத்துடன் இணைந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய நேதாஜியின் மரணம், தொடர்பான சர்ச்சை, இன்றும் தொடருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய, விசாரணை கமிஷன் அறிக்கைகள், வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தான், நேதாஜியின் இறுதி நாட்கள் தொடர்பான பல தகவல்களை, பிரிட்டன் இணையதளம் வெளியிட்டு வருகிறது.