தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நெல்லியடி பஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் புலிக்கொடியை ஏந்தியவாறு பஸ் நிலையத்தை வட்டமிட்டுச் சென்றுள்ளனர்.
தலைக்கு கறுப்பு நிறத் தலைக்கவசம் மற்றும் கறுப்பு நிற ஜெக்கட்டும் அணிந்தவாறு இவர்கள் புலிக்கொடியுடன் பஸ் நிலையத்தைச் சுற்றி வந்தனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருந்த நிலையிலேயே இந்த மர்ம நபர்களின் நடமாட்டம் காணப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலே இது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.