நெதர்லாந்தில் இயர்லன் எனும் இடத்தில் வசித்து வந்த தருக்சன் செல்வம் என்ற 15 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் குறித்த மாணவனுடன் கல்வி கற்கும் சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சக மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் குறித்த சிறுவனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தகாத வார்த்தைகளால் எழுதியுள்ளனர்.
மேலும் பலர் போலிப் பெயரில் குறித்தப் புகைப்படங்களுக்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவேற்றம் செய்துள்ளனர்.
கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்த பின்னரும் பாடசாலைக்கு திரும்ப மனமில்லாமல் இருந்துள்ள குறித்த சிறுவன் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
ஏழு கிழமைக்கு முன்னரும், தருக்சன் ஏற்கனவே ஒரு தடவை தற்கொலைக்கு முயன்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் தகுந்த நடவடிக்கை அக்கறை எடுக்கவில்லை எனவும் தமக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறுவனின் பாடசாலை நிர்வாகத்துடன் கதைத்தும், அவர்களும் கவனம் எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தருக்சன் பாடசாலை சென்ற காலங்களில் அங்கு தன்னோடு யாரும் பேசுவதில்லை என்று கவலைப்பட்டதாகவும் ஆனால் வீட்டில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததாக சகோதரி சரண்யா தெரிவித்தார்.
தருக்சன் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.