நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்கக் கோரிக்கை!

நெடுந்தீவு வைத்தியசாலையினுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து தருவதோடு, அங்கு நிரந்தர வைத்தியர்கள், மற்றும் தாதியர்களை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் குடாநாட்டில் தீவுகளில் ஒன்றாகக் காணப்படும் நெடுந்தீவு வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர் இன்றிக்காணப்படுவதால் இந்தப்பிரதேசத்தில்உள்ள சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ தேவைகளைப் பெறுவதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

மேற்படி வைத்தியசாலை அண்மையில் தரம் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாக இப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் முதல் வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலையில் குறித்த வைத்தியசாலை காணப்பட்டதுடன், சேவையிலுள்ள இரண்டு வைத்தியர்களும் சென்றுள்ளமையால் வைத்தியர் அற்ற நிலை காணப்படுகின்றது.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஊர்காவற்துறையில் இருந்து ஓர் வைத்தியரை தற்காலிகமாக நியமித்துள்ளனர். வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள குறித்த வைத்தியசாலையில் கடமையில் இருந்த தாதியரும் விலகிச் சென்றமையால் தாதியர் அற்ற நிலையும் காணப்படுகின்றது.

இதேவேளை மகப்பேற்றுவிடுதி, மற்றும் ஏனைய கட்டடங்களும் மிக மோசமாகச் சேதமடைந்து காணப்படுவதுடன், சாதாரண மருத்துவ உபகரணங்கள் கூட அற்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்தப்பகுதியிலுள்ள மக்கள் தமது மருத்துவத் தேவையைப்பூர்த்தி செய்வதாயினும் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்குப் படகில் சென்று அதன்பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் செல்லவேண்டும்.

ஒரு சாதாரண நோய்க்குக்கூட சுமார் மூன்று நான்கு மணித்தியாலங்கள் பயணம் செய்து தமது மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யவேண்டியுள்ளது.

ஆகவே நெடுந்தீவு மக்களினுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் குறித்த வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து நிரந்தர வைத்தியர்களை நியமித்துத்தருமாறு இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts