நூற்றாண்டைக் கடந்து வாழும் ஆரோக்கியமான ஆச்சி

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். இன்று நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் வயோதிபர் வரை தம் வாழ்நாளில் ஒரு ”பரசிற்றமோல்” மாத்திரையைத் தானும் வலி நிவாரணமாக பயன்படுத்தாதவர்கள் எவருமில்லை எனலாம்.

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது சுகர், பிறசர், கொலஸ்ரோல், கேன்சர், எனப் பல்வேறு தொற்றா நோய்களுக்கும் மற்றும் தொற்றும் நோய்களுக்கும்ஆளாகி வருகின்றனர்.

அன்றைய வாழ்க்கை முறை இயற்கை சார்ந்த வாழ்க்கையாகவும் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கையாகவும் இருந்தது. இன்று எல்லாம் செயற்கை முறையான வாழ்க்கைக்குள் மனிதன் சிக்கிக்கொண்டுள்ளான். கடுகதியாய் வாழ்ந்து கடுகதியாய்ச் சாகின்றான். இப்போதெல்லாம் 50 வயது வரையாவது உயிரோடு இருப்போமா என்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையிலே நாம் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கின்றோம். நாற்பது வயதை நெருங்கி விட்டாலே நோயோடும் உடல் நலக்குறையோடும் போராடிக் கொண்டு இன்னும் நாம் எத்தனை காலம் இப் பூமியில் வாழ்வோம் என்பது தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

இந் நிலையில் இந்தக் காலத்திலும் நீண்ட ஆயுளுடன் சுறுசுறுப்பாக தனது வேலைகளைத் தானே செய்துகொண்டிருக்கும் பழங்காலத்து ஆச்சி ஒருவர் உண்மையில் ஆச்சரியமானவர்தான்.

sellamma-1

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அமைந்துள்ளது புதுக்குடியிருப்புக் கிராமம். இக்கிராமத்தில் 101 வயதுடன் சுறுசுறுப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் செம்பாப்போடி செல்லம்மா (வயது 101) ஆச்சியைச் அவர் தற்போது வசிக்கும் புதுக்குடியிருப்புப் பிரதான வீதியில் உள்ள அவரது பேத்தி சவுந்தரம் என்பவரின் வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கடந்த வாரம் எனக்குக் கிட்டியது. புதுக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ஆசிரியர் நாகநாதன் துணையுடன் பழங்காலத்து ஆச்சி வாழ்ந்து கொண்டிருக்கும் அவ் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 1915 ஆம் ஆண்டு செல்லம்மா பிறந்திருக்கின்றார். இன்று முதுமையின் அடையாளமாக முதுகு கூனியிருந்தாலும் எம்மத்தியில் வாழும் முதுசொமாக செல்லம்மா ஆச்சி இருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
அக்காலத்து வாழ்க்கையை இப்போதும் நினைத்துப் பார்த்து மற்றவர்களளோடு பகிர்ந்துகொள்ளும் நினைவாற்றலோடு இவர் இருக்கின்றார்.

101 வயது செல்லம்மா ஆச்சி இரு திருமணங்கள் முடித்தவர். இவருக்குப் 12 பிள்ளைகளும் 62 பேரப்பிள்ளைகளும் 147 பூட்டப்பிள்ளைகளும் 27 கொள்ளுப்பிள்ளைகளும் இருக்கின்றனர். நிறையச் சொந்தங்களுடன் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் செல்லம்மா ஆச்சி தனக்கு நடந்த திருமண சம்பவத்தை மலரும் நினைவுகளாக என்னோடு பகிர்ந்து கொண்டார்.

sellamma-2

” மனே எனக்கு 13 வயசில கலியாணம் நடந்திச்சு. அது ஒரு பெரிய கதடா மனே! நான் ஆறாம் வகுப்பு வரதான் படிச்சநான். ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் என்ன அம்மாட தங்கச்சிட வீட்ட விட்டுட்டு போரதீவு காளியம்மன் கோயிலுக்குப் போயித்தாங்க. அந்தநேரம் பாத்து மாமாட மகன் வீட்ட வந்து என்னத் தூக்கித்து போயித்தாரு (சிரிக்கிறார்) பிறகு அப்பா வந்து பிரச்சினப்பட்டு பெரிய புதினமெல்லாம் நடந்தது. பிறகு எல்லாம் சரியாப் போயித்து” அப்ப 14 வயசில பிள்ளப்பெத்தநான். அந்நேரம் சோறுகறியெல்லாம் நல்ல ருசியா இருக்கும் மண் சட்டியிலதான் சோறாக்கிற. மீனெண்டா பெரிய பெரிய மீன் இவர் வாங்கித்து வருவார். இப்ப சோறுகறியெல்லாம் நஞ்சாப் போச்சி. பிள்ள பெத்தா மிளகு தண்ணிச் சாப்பாடுதான் தருவாங்க. பத்தியச் சாப்பாடு சாப்பிடடுத்தான் வளந்தம். எங்கயும் தூரப் போறதெண்டா கரத்தையில (மாட்டு வண்டி) போறது. என்னவும் எண்டா சொந்த பந்தமெல்லாம் ஒரு இடத்தில கூடிடுவம். இப்ப சொந்த பந்தத்த பாக்கிறதே கஸ்டமாயிருக்குது. இஞ்ச இருக்கிற கண்ணாமுனைப் பிள்ளையார இவரும் நானுந்தான் சிறாம்பிகட்டி வச்சுக் கும்பிட்டு வந்தம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பொங்கிப் பூசயும் செய்வம். எண்ட புள்ளையள், பேரப்புள்ளையள், பூட்டப்புள்ளையள் எல்லாம் என்ன நல்லாப் பாக்குதுகள். இப்ப அரசாங்கத்தால 2250 ரூபா தாராங்க அதில மாப்பெட்டி,தைலம் எல்லாம் வாங்குவன். அந்தக்காலத்தப்போல இந்தக்காலம் இல்ல. உடம்புல வருத்தமெண்டா நாட்டு வைத்தியந்தான் செய்யிறது. வீட்டில சும்மா இருக்க மாட்டம் ஏதாவது ஒரு வேலய செய்து கொண்டுதான் இருப்பம். வீட்டுவேல செய்யாட்டி அம்மா அடிப்பாவு. இப்ப ரெண்டொரு நாளாத்தான் நெஞ்சிக்க நோவுதுடா மனே ” என்றார். செல்லம்மா ஆச்சி.
செல்லம்மா ஆச்சி சொல்வதைப் போல அந்தக் காலத்தில் உரலில் நெல் குத்தி, அம்மியில் மஞ்சள் அரைத்து, ஆட்டுக்கல்லில் உழுந்து அரைத்து, கிணற்று வாளியில் நீர் அள்ளி உடலுக்குக் கொடுத்த பயிற்சியும் அவரது உணவுப் பழக்க வழக்கமுமே இத்தனை காலமும் அவர் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு காரணமாக இருக்க முடியும். இன்று பலர் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியாத நிலையிலே இருக்கின்றனர். சொகுசு வாழ்க்கை கூடிவிட்டதால் உடல் ஆரோக்கியமும் கெட்டு, மன ஆரோக்கியம் இன்றி மன உளைச்சலில் மனிதர்கள் உழன்றுகொண்டிருக்கின்றனர்.

செல்லம்மா ஆச்சி தமது அன்றாடக் கடமைகளைத் தானே செய்வது, மூன்று நேரம் தவறாது சாமி கும்பிடுவது போன்றவற்றைச் செய்து வருகின்றார். சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில் மனப்பாடம் பண்ணிய தேவாரங்களைப் படிப்பது, தனது பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளிடம் பழங்காலத்துக்கதைகளைக் கதைப்பது என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்.

sellamma-3

செம்பாப்போடி செல்லம்மா (வயது 101) ஆச்சி போன்றவர்கள் எம்மத்தியில் இருக்கின்ற முதுசொம்களாவர். இன்னும் இவர் பலகாலம் வாழ்ந்து உலகிலே அதிக காலம் வாழ்ந்த வயது கூடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைக்க வேண்டும் என இவரது உடல் ஆரோக்கியத்திற்காக இறைவனைப் பிராத்திப்போம்.

Related Posts