நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் அதிகளவானோர் தொழிலுக்காக எம்மை நாடி வருகின்றனர்.
அத்தகைய மாணவர்கள் தொழில்சார் கல்வியை கற்றால் மாத்திரமே தொழில் வாய்ப்புகளைப் பெறமுடியும்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒரே தொழிநுட்ப கல்லூரியில் போதுமான இட வசதிகள் இருந்தும் சுமார் 500 மாணவர்கள் பயிலும் கல்லூரியில் வெறும் 15 தமிழ் மொழிமூல மாணவர்களே ஒரு பாடநெறியில் கல்வி கற்கின்றனர்.
எனவே எதிர்காலத்தில் நுவரெலியா தொழிநுட்பக் கல்லூரியில் தமிழ் மொழி மூல பாடநெறிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா தெரிவித்துள்ளார்.
திறன்விருத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்க பண்ணடார கடந்த செவ்வாயன்று நுவரெலியா தொழிநுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவருடன் தொழிநுட்ப கல்லூரிக்கு வருகை தந்திருந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கல்லூரி அதிகாரிகளுடன் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன் விஷேடமாக தமிழ் மொழி மூல பாடநெறிகளை தொடங்குவதில் உள்ள சிக்கல்களை கேட்டறிந்ததுடன் அங்கு இடம்பெற்ற கூட்டத்திலும் உரையாற்றும்போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று வேலையில்லாபிரச்சினை நாட்டில் பெருமளவில் காணப்படுகின்றது. அரசியல்வாதிகளான எம்மை நாடிவரும் இளைஞர் யுவதிகள் அதிகம் தொழில் வாய்ப்புகளையே கோருகின்றனர்.
ஆனால் அவர்களிடம் கல்விசார் தகைமைகள் இருக்கின்றபோதும் தொழில்சார் தகைமைகள் இருப்பதில்லை. தொழில் சந்தையில் தொழில்சார் பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கே அதிக கிராக்கி நிலவுகிறது.
எனவே, பாடசாலை கல்வியை முடிக்கும் மாணவர்கள் தொழில்சார் கற்கை நெறிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
நல்லாட்சி அரசு இந்த தொழில்சார் கல்வியையும் தற்போது இலவசகல்வியாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்தார்.