நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள்

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள்-மத்திய மின்சக்தி அமைச்சரிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை

04

நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய இங்கு தெரிவித்திருந்தார். இனிமேலும் அவ்வாறு இடம்பெறாதிருக்க வேண்டுமானால் சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கான சலுகை மின்கட்டண தேசிய அங்குரார்ப்பண விழா நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (01.10.2016) நடைபெற்றது. மத்திய மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்களுடன் ஆரம்பமான எமது போராட்டம் பின்நாளில் விடுதலைப் புலிகள் வங்கியொன்றை நிர்வகிக்கும் அளவுக்குப் பலம் பெற்றிருந்தது. இவற்றில் ஈடுபட்டவர்களைப் பயங்கரவாதிகள் என்று தென் இலங்கையில் சொல்லலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் இவர்கள் விடுதலைப் போராளிகள்.

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இப்போது மாத்திரம் அல்ல எப்போதும் நடைபெறக் கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். எமது மக்கள் இனிமேலும் இரத்தம் சிந்துவதை நாங்கள் விரும்பவில்லை. போரில் தென் இலங்கை மக்கள் பலியாகுவதையும் நாங்கள் விரும்பவில்லை.

யுத்தத்துக்குப் பிறகு அரசின் கவனம் வடக்கின் மீது திரும்பி இருக்கிறது. இப்போது சலுகை மின்கட்டண தேசிய விழா நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு விழாவும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேசிய ரீதியிலான சாரணர் ஜம்போறியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் தொடக்க விழாவும் கிளிநொச்சியிலேயே ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால், இந்த விழாக்கள் அரசாங்கம் வடக்கு மக்களின் மீது கரிசனை கொண்டிருக்கிறதாக உலகத்துக்குக் காட்டுகின்ற ஒரு முயற்சியாக, போரினால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது.

இவை போன்ற அபிவிருத்தியுடன் தொடர்பான விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். மின் கட்டணத்தில் சலுகை போரினால் பாதிக்கப்பட்ட எமது விவசாயிகளுக்கு நன்மை தரவல்லது. ஆனால், இத்தகைய அபிவிருத்திகள் நிலைத்து நிற்க வேண்டுமானால் நிலையான அரசியல் தீர்வு அவசியம். நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை நிலையான அரசியல் தீர்வின்மீதே கட்டி எழுப்ப முடியும். எனவே, தமிழ் மக்கள்; ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு மத்திய அரசில் செல்வாக்குப் பெற்றிருப்பவர் என்ற வகையில் மின்சக்தி அமைச்சர் அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படங்களுக்கு..

Related Posts