Ad Widget

நீர்வேலி பகுதியில் தாய் ஒருவர் தனது 6வயது மகளை மோசமாக தாக்குவதனை வீடியோ எடுத்தவரின் வாக்கு மூலம்

நீர்வேலி பகுதியில் தாய் ஒருவர் தனது மகளுக்கு தடியினாலும் , கைகளினாலும் , கத்தியிலானும் , மிக மோசமாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன கடந்த வியாழக்கிழமை குறித்த சம்பவம் நடைபெற்று இருந்தது. குறித்த வீடியோ காட்சி பகிரப்பட்டத்தை அடுத்து , அது தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதேவேளை அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தருக்கும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளும் தாயை பொலிசார் அன்றைய தினம் இரவு கைது செய்து மறுநாள் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்ட தாயை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் , அவர்களின் மூன்று பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.

வீடியோ எடுத்தவரின் வாக்கு மூலம்.

எனது அலுவலகத்திற்கு அருகிலையே சிறுமியின் குடிசை வீடு அமைந்துள்ளது. அந்த குடும்பம் மிகவும் ஏழ்மை குடும்பமாக உள்ளதனால் தினமும் சண்டைகள் சச்சரவுகள் இடம்பெறும். அது வழமையான ஒன்றாகவே இருக்கும்.

கடந்த வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் நான் குளித்துக் கொண்டு இருந்த வேளை சிறுமியின் அவல குரல் கேட்டது. நானும் வழமையாக அந்த வீட்டில் நடக்கும் சச்சரவு தான் என எண்ணிக் குளித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் அவல குரல் , பெரிதாக கேட்க தொடங்க நான் எனது அலுவலக மதிலால் எட்டி அந்த குடிசை யை பார்த்தேன். அங்கு அந்த சிறுமியை , அந்த பெண் தடியினால் மிக மூர்க்க தனமாக தாக்கிக் கொண்டு இருந்தார். சிறுமி நிலத்தில் வீழ்ந்து அவல குரல் எழுப்பிய வண்ணம் இருந்தது.

என்னால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. மதிலால் பாய்ந்து சென்று சிறுமியை காப்பாற்ற எண்ணினேன். ஆனால் அந்த குடும்பத்தின் நிலைமையை உணர்ந்து நான் அவ்வாறு சென்றால் என் மீது பழி சுமத்த பட கூடும் எனும் எண்ணம் தோன்றியதனால் உடனே அலுவலகத்திற்குள் சென்று புகைப்பட கருவியை எடுத்து அந்த சிறுமி தாக்கப்படுவதை ஒளிப்பதிவு செய்தேன்.

அந்த ஒளிப்பதிவை நேரே பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கொடுப்போம் என முதலில் எண்ணினாலும், அது எனக்கு வேறு விதத்தில் ஆபத்தாக அமையுமோ எனும் அச்சம் காரணமாக அந்த வீடியோ ஒளிப்பதிவை எனது முகநூலில் பதிவேற்றம் செய்தேன்.

அதன் ஊடாக பலரின் பார்வைக்கு சிறுமி தாக்கப்படும் காட்சி சென்றது. அத்துடன் பல ஊடகங்களிலும் பகிரப்பட்டன. அதன் மூலம் சிறுமி காப்பற்றப்பட்டு உள்ளார். என சிறுமி தாக்கப்படுவதை ஒளிப்பதிவு செய்த நபர் தெரிவித்தார்.

சிறுமியின் குடும்பமும் , பின்னணியும்.

பருத்தித்துறை வீதியில் நீர்வேலி கந்தசுவாமி ஆலய சந்திக்கு அருகில் உள்ள தென்னமரங்கள் சூழ்ந்த ஒரு காணியின் நடுவே சிறிய குடிசை. அதுவே அந்த சிறுமி வாழ்விடம்.

அந்த குடிசை தனியே படுத்து உறங்குவதற்கு மாத்திரமே பயன்படுத்த படுகின்றது. சமையல் எல்லாம் குடிசையின் வெளியில் திறந்த வெளியிலையே..

அங்கு சிறுமியின் தாய் , தகப்பன் , தங்கை , மற்றும் தம்பி ஆகியோர் வசிக்கின்றார்கள். மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம். சிறுமி நீர்வேலியில் உள்ள பிரபலமான கல்லூரியில் தரம் நான்கில் கல்வி கற்று வருகின்றார்.

தினமும் தனது வாழ்விடத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்தே சென்று தனது கல்வியை தொடருவார். பாடசாலை மீண்டும் வீடு அதுவே சிறுமியின் வாழ்கை.

சிறுமியின் தகப்பன் 60 வயதுடைய நபராபர். அவரது தற்போதைய தொழில் சிரட்டை விற்பனை. இவர் பிறந்தது திருகோணமலை. பின்னர் அங்கிருந்து கடந்த 1988ம ஆண்டு யாழ்ப்பணத்திற்கு தொழில் தேடி வந்து , யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துக் கொண்டார்.

திருமணத்தின் பின்னர் ஐந்து பிள்ளைகள் பிறந்தன. அவர்களில் நால்வர் சுகவீனம் காரணமாக சில வருட இடைவெளிகளில் மரணமடைந்தனர். அதன் காரணமாக மனைவி மனநோயால் , பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சில காலத்தின் பின் கடந்த 2005ம ஆண்டு மரணடைந்தார்.

மனைவி மரணமடைந்த சில மாதங்களில் சிறுமியின் தகப்பனார் 49 வயதில் , இரண்டாம் தரமாக ஒரு பெண்ணை மணம் முடித்தார். அந்த பெண்ணை மணம் முடித்ததும் முதல் மனைவியின் பிள்ளையின் தொடர்புகள் அற்று போனது.

பின்னர் இரண்டாம் மனைவியின் ஊடாக இவர் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனார். இரண்டாம் திருமணம் முடித்து ஒரு வருட காலப்பகுதிக்குள் மூன்றாம் திருமணத்தை , தனது 50 ஆவது வயதில் செய்து கொண்டார்.

மூன்றாம் திருமணம் காரணமாக இரண்டாம் மனைவிக்கும் இவருக்கும் இடையில் சண்டை சாச்சரவுகள் ஏற்பட தொடங்கின. அதனால் கடந்த 2007ம ஆண்டு இரண்டாம் மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

அதன் பின்னர் மூன்றாம் மனைவியுடன் , வாழ்ந்தார். மூன்றாம் மனைவி ஊடாக , இரு பெண் பிள்ளைகளுக்கும் , ஒரு ஆண் பிள்ளைக்கும் தகப்பன் ஆனார். அத்துடன் அவரது மூன்றாம் மனைவி தற்போது , ஆறு மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தாய் சிறுமியை தாக்கியதை அடுத்து கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

அதன் போது சிறுமியின் சார்பில் , நான்கு பெண் சட்டத்தரணிகள் உட்பட ஆறு சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையானார்கள்.

நீதிமன்ற விசாரணையின் போது எதற்காக சிறுமியை இவ்வளவு மூர்க்க தனமாக தாக்கினீர்கள் ? என பதில் நீதிவான் தாயிடம் கேட்ட போது , பாடசாலை செல்ல மாட்டேன். என அடம் பிடித்துக் கொண்டு இருந்ததால் தான் தாக்கினேன். இதுவரை எனது பிள்ளையை நான் கை நீட்டி அடிக்க வில்லை. அன்றைய தினம் மாத்திரமே அடித்தேன். என பதில் நீதிவானுக்கு பதில் அளித்தார்.

அதன் போது சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மோகனதாஸ் சிறுமி , குறித்த பெண்ணின் மகள் இல்லை , சிறுமியின் தகப்பனின் இரண்டாம் தாரத்தின் பிள்ளை என அயலவர்கள் தெரிவித்த கருத்தை மன்றில் சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பதில் நீதிவான் உத்தரவு இட்டார் அத்துடன் , குறித்த வீடியோ காட்சியை மொரட்டுவா பல்கலைகழகத்திற்கு அனுப்பி ஆய்வுக்கு உடப்டுத்தும்மாறும் , சிறுமியின் தகப்பனார் பற்றியும் விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்குமாறும் , சிறுமி தாக்கப்பட்டது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெறுமாறும். பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.

அத்துடன் , சிறுமியின் தாயாரை எதிர்வரும் 7ம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் , சிறுமி மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.

சிறுமிக்கு உதவி கரம் நீட்ட பலர் தயார்.

சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பார்வையிட்ட பலர் சிறுமியை மீட்குமாறும். அந்த சிறுமிக்கு உதவ தாம் தயார் எனவும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக , கருத்துக்களை வெளியிட்டனர்.

தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக இந்த பிரச்சனை அனுகப்படுவதனால் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே உதவிகளை மேற்கொள்ள முடியும்.

தற்போது அந்த சிறுமியினுடையதும் , சிறுமியின் சகோதர்களுடைய வாழ்வு சிறக்க வேண்டும். என்பதே பலரின் எதிர்பார்ப்பு. அத்துடன் இந்த சிறுமி போன்று வேறு யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதும் அனைவரதும் பிரார்த்தனை ஆகும்.

Related Posts