Ad Widget

நீர்வேலி இரட்டைக் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ..

இந்த வழக்கு விசாரணைக்காக 28 ஆம் திகதி புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே முடிவுற்றுள்ள சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அரச சட்டத்தரணி மற்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஆகியோர் தமது தொகுப்புரைகளை நிகழ்த்தினர்.

இந்தத் தொகுப்புரைகளைச் செவிமடுத்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கிற்கான தீர்ப்பு 29 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று வழங்கப்படும் என நேற்றயதினம் தெரிவித்தார்.

சகோதரியையும் மைத்துனனையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சுமத்தி குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரன் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீர்வேலி மேற்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்க்கண்டு உதயகுமார் என்பவரையும், அவருடைய மனைவியாகிய உதயகுமார் வசந்திமாலா என்பவரையும் கொலை செய்தததுடன், அவர்களின் மகனான உதயகுமார் குகதீபனைக் காயப்படுத்தி, அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, எதிரி குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரன் என்பவருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts