நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்: சிவநேசன்

வவுனியாவில் மகாவலி திட்டத்துடன் தொடர்புடைய படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதலில் இது தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் அல்லது பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டுமென வட. மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வட. மாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “வவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைக்கு மக்கள் தான் காரணம் எனக் கூற முடியாது. அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவே குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போயின. பல நூற்றுக்கணக்கான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளமையால் அதன் கீழான விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

மகாவலி திட்டத்துடன் தொடர்புடையதாக படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தற்போது இங்கு கொண்டு வந்துள்ளார்கள். எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற 28 அல்லது 30 குளங்கள் கூட அதனால் பயனடையவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் இந்த முறை ஒரு சிறப்பான முறையாக இருந்தாலும் கூட இங்கு கொண்டு வருகின்ற போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீர் வடக்கு மாகாணத்திற்கு வருகின்ற போது அது வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழே வரவேண்டும். அப்படி செய்வார்களாக இருந்தால் அது சிறப்பான திட்டமாக அமையும்.

இதுதவிர, வடக்கு மாகாணத்திற்கான பயிற்செய்கை தொடர்பான ஒரு கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நெற்செய்கை தொடக்கம் ஒவ்வொரு பயிற்செய்கை தொடர்பிலும் திட்டம் வகுத்து அதன் மூலம் வடக்கு மாகாண விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. அதனால் வடக்கு மாகாண விவசாய கொள்கைளை நாம் அறிமுகப்படுத்துகின்றோம். அதன் மூலம் நாம் விவசாயத்தை மேலும் முன்னேற்றமான பாதைக்குக் கொண்டு செல்ல முடியும்” என கூறினார்.

Related Posts