நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து செல்வதாலும், இருக்கின்ற நீரும் மோசமாக மாசடைந்து வருவதாலும் இன்று சொட்டு நீரையும் சொத்தாகக் கருதிச் சேமிக்க வேண்டியவர்களாகவே நாங்கள் வாழ்கிறோம்.
இந்நிலையில், நீரை அதிகளவில் பயன்படுத்துகின்ற துறையாக விவசாயம் இருப்பதால் நீரை விரயமாக்காத நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முன்வரவேண்டும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உணவு விவசாய நிறுவனத்தின் அனுசரணையுடன் மானிய அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்கும் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளர் அ. செல்வராசா தலைமையில் கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தண்ணீரில் முக்கால் பங்குக்கும் அதிகமான தண்ணீர் விவசாயத்துக்கே செலவழிக்கப்படுகிறது. மனிதர்கள் பயிர் செய்ய ஆரம்பித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வெள்ள நீர்ப்பாசன முறையையே நாங்கள் இப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பயிர்களைச் சுற்றித் தண்ணீரை வெள்ளக் காடாகத் தேக்கி வைப்பதில் ஏற்படும் திருப்தி பரம்பரை பரம்பரையாக எங்களில் நீடிக்கிறது போலும். இதனால்தான் எமது கிணறுகளில் இருந்து நீர்ப்பம்பிகள் இரவுபகலாகத் தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்தத் தண்ணீரில் பெரும் பங்கை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்தத் தண்ணீரில் பெரும்பங்கு தேவையில்லாத நிலத்துக்குப்போக, இன்னுமொரு பெரும்பங்கு ஆவியாக, இன்னுமொரு பங்கைக் களைகள் குடிக்க எமது பயிர்களைச் சென்று சேர்வது நாம் பாய்ச்சிய தண்ணீரில் அரைவாசிக்கும் குறைவான அளவு தண்ணீர்தான்.
தண்ணீருக்கான பற்றாக்குறைவு ஏற்பட்டிருக்கும் நிலையில் தண்ணீரை இயன்ற அளவு சேமிப்பது எல்லோரினதும் கடமையாகும். செல்லிடப்பேசிகள், கணினிகள் போன்ற சாதனங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமானவுடன் பழையனவற்றை – அவை நன்றாக இருந்தாலும்கூட – வீசிவிட்டு உடனடியாகப் புதியவற்றை வாங்கும் நாம் விவசாயத்தில் மட்டும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தயங்குகிறோம்.
இஸ்ரேல் அறிமுகப்படுத்திய சொட்டு நீர்ப்பாசனம், தூவல் நீர்ப்பாசனம் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பயிர்களுக்குத் தேவையான அளவு தண்ணீரை மட்டுமே விநியோகிக்கலாம். இந்த நவீன நீர்ப்பாசனக் கருவிகளை உணவு விவசாய நிறுவனத்தின் உதவியுடன் விவசாயத் திணைக்களம் எங்கள் விவசாயிகளுக்கு விநியோகித்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. அவர்கள் பாரம்பரியமுறையில் தண்ணீரை இறைத்துக்கொண்டிருக்கவே விரும்புகிறார்கள். இந்த மனப்பாங்கில் மாற்றம் வரவேண்டும்.
யாழ்ப்பாணத்துக்கு 1965இல் வந்திருந்த இஸ்ரேலிய விஞ்ஞானி ஏரட் நமது இடைவிடாத இறைப்பு முறைகளைப் பார்வையிட்ட பின்னர், குடாநாடு பாலைவனமாகும் என்று எச்சரித்துவிட்டுப் போயிருந்தார். இந்த எச்சரிக்கையைக் கருத்தில் எடுத்து ஊதாரித்தனமாகத் தண்ணீரைச் செலவு செய்யாமல், பயிர்களுக்கு வேண்டிய நீரை மட்டுமே தரக்கூடிய சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தூறல் நீர்ப்பாசனத்தையும் அதிகளவில் நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். அப்போதுதான் நீர்வளத்தைப் பேணி விவசாயத்தையும் மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் அ.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நீரிறைக்கும் இயந்திரங்களை வழங்கினார்கள்.