நீரை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்; வறட்சியின் பாதிப்பில் வடக்கு

வடமாகாணத்தின் பல பகுதிகள் வறட்சியினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக தீவகப் பகுதிகள் மார்ச் மாதத்திலேயே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, இம்முறை வெயில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றமை தொடர்பில், யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகக் குறைந்த 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்காவிட்டால் கூட அடுத்து வருகின்ற ஜூன் மாதத்தில் இருந்து வடமாகாணம் மிகப்பெரிய வறட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நிலவுகின்ற அதிகளவான வெப்பநிலை மற்றும் ஆவியாக்கல் நிலையின் காரணமாக நீரினைப் பாதுகாக்கும் பட்சத்திலேயே வறட்சியைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் கிடைக்கக்கூடிய மழை வீழ்ச்சி பொய்த்தால், குடிநீர்ப் பிரச்சினை உட்பட அன்றாடம் பயன்படுத்தும் நீருக்குக்கூட பல்வேறு சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டில் மக்கள் நீரை துஷ்பிரயோகம் செய்வதாகவும் அதாவது, தமது தேவைக்கு அதிகமான நீரைப் பயன்படுத்துவதாகவும், நீரைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் நீரை வீண் விரயம் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே யாழ். மாவட்டத்தில் கிணற்று நீரைப் பயன்படுத்துகின்ற மக்கள் அடுத்து வருகின்ற மூன்று மாத காலப்பகுதிக்குள் நீரை இரைக்கும் செயற்பாட்டை இயலுமானவரை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், வறட்சியினால் இரண்டு இலட்சத்து 45 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 5 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் 13 மாவட்டங்கள் வறட்சியினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் அதிகளவு வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts