“தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம்.
எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் வாக்களிப்பது மிகவும் அவசியமாகும்.
கடந்த பல வருடங்களில் நாம் பட்ட துன்பங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்நிலைமை தொடரக்கூடாது என்பதில் எமது மக்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.
எனவே, இந்நிலைமை தொடராமல் இருப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்களில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும்.
அவ்விதமான மாற்றம் இந்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாகத்தான் ஏற்படலாம். தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பவர்களாக இருந்தால் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கப்போவதுமில்லை ஒரு தீர்வை அவர்கள் பெறப்போவதுமில்லை.
அதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்தத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தவறாமல் வாக்களிப்பது அவர்களின் புனித கடமையாகும்.
தவறாமல் ஒவ்வொரு வாக்காளர்களும் தமது வாக்கைப் பயன்படுத்தவேண்டும். எதிர்காலத்தைப் பக்குவமான முறையில் வழிநடத்துவதற்கு – எமது மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு எமது மக்களின் வாக்களிப்பு இந்தத் தேர்தலில் எட்டப்படுகின்ற முடிவில் ஒரு முக்கியமான அங்கமாக அமையவேண்டும்.
இது அத்திவாசியம். இன்று பல்வேறு காரணங்களின் நிமித்தம் பெரும்பான்மையாக உள்ளவர்கள்கூட ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். அவர்களுடன் ஒத்துழைத்து எங்களுடைய நலனும் கருதி ஆட்சி மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்.
மக்களின் மிகவும் பலமான ஆயுதம் அவர்களுடைய ஜனநாயக உரிமையான வாக்குரிமை. இதனைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வருகின்றபோது அதை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.
எனவே, தமிழ் பேசும் மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னமான அன்னம் சார்பாகப் பயன்படுத்தவேண்டும் என்று நாம் மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கிறோம்” – என்றார் சம்பந்தன்.