இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபானது உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதற்கான ஒரு பாதையை அமைத்துக்கொடுக்கும்” என்று அமெரிக்கா வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் இரவு அமெரிக்க வெளிவிவகார அமைச்சரை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே ஜோன் கெரி மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மட்டத்திலான உறவுகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், ஐ நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டு இதன்போது உரையாற்றிய ஜோன் கெரி, ஒரு துணை அனுசரணையாளராக இணைந்துகொள்வதற்கான இலங்கை அரசின் முடிவு இத்தீர்மானத்தில் பிரதிபலிக்கும் அர்ப்பணங்களை வழங்குவதற்கு நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றுவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசு ஜனநாயகத்தைப் பலப்படுத்தி இலங்கையில் சிவில் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், கடந்தகால நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவண்ணம் கடந்தகால துன்பகரமான அனுபவங்களுக்கு தீர்வுகூறும் வகையிலும் துணிகரமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதனால் இலங்கைக்கான எமது ஒத்துழைப்பை இத்தீர்மானம் வெளிப்படுத்தி நிற்கிறது என்றும் ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துரைத்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டுடன் இலங்கையர்களுக்கே உரிய ஒரு நம்பகமான நீதி செயன்முறையை நோக்கிய ஒரு முக்கிய படியாக இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.
இந்தத் தீர்மானம் காணாமல்போனவர்களது குடும்பங்கள், அவர்களது விருப்பத்திற்குரியவர்கள் தொடர்பாக அறிந்துகொள்வதற்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதற்கான ஒரு பாதையை அமைத்துக்கொடுக்கும் அதேநேரம், இராணுவத்தினர் உள்ளிட்டவர்களின் நன்மதிப்பைப் பாதுகாப்பதோடு, பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதிருப்பதை உத்தரவாதப்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.