நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தை முகாமுக்குள் முடக்குங்கள், ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு அவசரக் கடிதம்

tnaஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையயாப்பமிட்டு அனுப்பவுள்ள இந்தக் கடிதத்தின் சாராம்சம் வருமாறு:

தமிழ்ப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு அதிகரித்துள்ளதாக ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதைவிட வடக்கில் அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னம் இருப்பதை பல்வேறு அமைப்புகளும் தெரியப்படுத்தி இருந்தன.

இந்த நிலையில் வடமாகாணத் தேர்தலில் அரச கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரில் இராணுவத்தால் தெரிவு செய்யப்பட்ட சிலரும் போட்டியிடுகின்றனரோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதற்கேற்ப சில அரச கட்சி வேட்பாளர்களின் சுவரொட்டிகளை படையினரே ஒட்டுவதுடன், அவற்றை கிழிக்க வரும் தேர்தல் அதிகாரிகளையும் அச்சுறுத்தி உள்ளனர் என்றும் எமக்குத் தெரியவருகின்றது. இந்த நிலையில் வடமாகாண தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், நீதியான முறையில் இந்தத் தேர்தல் நடை பெறுவதற்கும், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் வடக்கில் உள்ள படையினரை தேர்தல் முடியும் வரையாவது முகாம்களுக்குள் முடங்கியிருக்க நீங்கள் உத்தரவிட வேண்டும் என்றுள்ளது.

Related Posts