நீதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த சீ.வி.கே.சிவஞானம்

வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை எனவும், அடாத்தாக விகாரைகள் அமைக்கப்படுவதையே எதிர்ப்பதாகவும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண சபை பேரவை செயலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

வடக்கில் நடப்பதற்கு ஒப்பாக கிழக்கிலும் தனியார் காணிகளில் விகாரைகள் அமைக்கப்படுவதும், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மத வாதம், இனவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் செயற்படும் விடயமும் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் விடயமென அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பிரேரணை சபையில் அங்கீகரிக்கப்பட்டதன் பின் அது சபையின் பிரேரணையாகும். அது தனிநபர்கள் சாராது எனவும், அதேபோல் புத்தசாசன அமைச்சர் வட மாகாண சபையின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற அடிப்படையில் இது தொடர்பில் கலந்துரையாடி இருக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

வடமாகாண சபை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதம், மதவாதத்தை தூண்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியது இல்லை எனவும், எதிர்காலத்திலும் நிறைவேற்றபடப்போவது இல்லை எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts