நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும் என நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கமைய தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கின்றேன். நாட்டில் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்ய இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவும். எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டும்.

தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை அவர் உடன் நிறுத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் நடவடிக்கைளை அவர் முன்னெடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள அணியினரிடம் அரசாட்சிப் பொறுப்பை அவர் வழங்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

உடல்நலக் குறைவால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts