நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது.
இலவசக் கல்வியை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தேசிய உயர் கணக்கீட்டு டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது.
இதில் நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி கோட்டை ஊடாக கொழும்பு வோட் பிளேசிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கிப் படையெடுத்தது.
பேரணியின் இறுதியில் நேற்று மாலை மானியங்கள் ஆணைக்குழு முன்பாக கூடிய மாணவர்கள் அந்த இடத்திலும் தங்களது கோரிக்கையை உரக்கத் தெரிவித்தனர்.
இதே பகுதியில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இருந்த போதிலும் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பொலிஸார் திரண்டிருந்த போதிலும், போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் தடங்கலை ஏற்படுத்தவில்லை.
போராட்டத்தின் இறுதியில் மானியங்கள் ஆணைக்குழுவின் யோசனைப்படி மாணவக் குழு பேச்சு மேசைக்கு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலை ஏற்பட்டது.