நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விக்னேஸ்வரனின் ஆட்சேபனை நிராகரிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது.

பா. டெனிஸ்வரனை மாகாண அமைச்சுப்பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாது முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்காமல் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுள்ளமையினால் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக பா. டெனிஸ்வரன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

டெனீஸ்வரனின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரால் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆட்சேபனை மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

ஆட்சேபனை மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகிய இருவர் முன்னிலையில் இன்று கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு அடிப்படையற்றது என்று சுட்டிக்காட்டி மன்று, அதனை நிராகரித்துக் கட்டளையிட்டது.

இந்த நிலையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டு மனு மீதான விசாரணை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு மன்றால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts