நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில், குறித்த தடை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த நகர்தல் பத்திரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளபோதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில், உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் இம்முறையும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலக முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்களினால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts