Ad Widget

நீதிமன்றக் கட்டடம் மீதான தாக்குதல்: 3 பேருக்கு பிணை! 21 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தின் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் சந்தேக நபர்கள் 24 பேர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலர் ஏற்கனவே கட்டங்கட்டமாக பிணையில் விடப்பட்டுள்ளார்கள். இவர்கள் 24 பேரும் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் 110 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மூவர் பிணையில் விடப்பட்டனர்.

இவர்கள் மூவரும் தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஐந்து பேர்கள் கொண்ட ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இவர்களில் ஒருவர் 17 வயதுக்கு உட்பட்டவர் என்ற வகையிலும் மற்றும் ஒருவர் வேலை செய்பவர் என்ற வகையிலும் மற்றும் ஒருவரின் தந்தை சுகவீனமடைந்திருப்பதன் காரணமாகவும் யாழ்ப்பாணம் நீதிவான் சிவகுமார் இவர்களுக்கான பிணையை வழங்கியுள்ளார்.

ஏனைய 21 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படியும் உத்தரவிட்டார்.

Related Posts