நீதவான் உத்தரவை ஏற்று அழைத்துச் சென்ற சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைத்தார் பெண் சட்டத்தரணி!

யாழ். பருத்தித்துறையில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பருத்தித்துறை நீதவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார்.

இதன்படி தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குறித்த சந்தேகநபரை பெண் சட்டத்தரணி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முற்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு தனது வாகனத்தில் பெண் சட்டத்தரணி அழைத்துச் சென்றார்.

இந்தத் தகவலை அறிந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உள்பட பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே குவிந்தனர். பெண் சட்டத்தரணி அழைத்துவந்த சந்தேகநபரை அவர்கள் கைது செய்வதற்கு முற்பட்டனர். அதனால் பொலிஸாருக்கும் பெண் சட்டத்தரணிக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

அதனால் நீதிவானிடம் சென்று பொலிஸார் தன்னுடன் நடந்துகொண்ட விதம் தொடர்பில் முறையிடப் போவதாகக் கூறிவிட்டு பெண் சட்டத்தரணி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றப் பதிவாளரிடம் சென்றார்.

அங்கு தன்னால் அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் தொடர்பான வழக்கேட்டை உடனடியாக நீதிவானுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அங்கிருந்து நீதிவானின் உதவியாளர்களிடம் சென்று தான் நீதிவானை சந்திப்பதற்கு உடனடியாக அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்றுப் பிற்பகல் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் பெண் சட்டத்தரணியை நீதிவான் சந்தித்தார்.

இதன்போது சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்குட்படுத்த நீதிமன்று கட்டளையிட்ட விடயத்தை நீதிவான், சட்டத்தரணியிடம் கூறினார். அதனால் நீதிமன்ற ஏற்படுகளின் பிரகாரம் சந்தேகநபரை மன்றில் முற்படுத்த தன்னால் அனுமதிக்க முடியாது என்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் அவரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் நீதிவான் அறிவுறுத்தினார்.

இதனால் சந்தேகநபரை தனது வாகனத்தில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு பெண் சட்டத்தரணி அழைத்துச் சென்றார். அங்கு அவரை ஒப்படைத்தார். பெண் சட்டத்தரணியின் காரில் சந்தேகநபரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறைப் பொலிஸார், அவரை நேற்று பருத்தித்துறை நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தினர்.

சந்தேகநபரை வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்த ஏற்பாடு செய்யுமாறு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார்.

Related Posts