கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து நேற்றுக்காலை வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் பணப்பையினை பிக்பொக்கட் அடித்ததாக கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
தனது பணப்பை காணாமல் போனமை தொடர்பில் நீதவான் உடனடியாக அறிவித்ததை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.’பிக்பொக்கட்’ அடிக்கப்பட்ட பணப்பையில் இருந்த பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போதே பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.
நீதவானின் பணப்பையில் அவுஸ்திரேலிய டொலர்கள் 50 மற்றும் அமெரிக்க டொலர் ஒன்றும் இருந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தான் பணப்பையினை ‘பிக்பொக்கட்’ அடிக்கவில்லை என்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பதற்காகவே சந்தேகநபருக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்ததாக புலனாய்வாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்த பதில் நீதவான் சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.கொழும்பில் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு நீதிச்சேவை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் வருகை தந்தபோதே நீதவானின் பணப்பை பிக்பொக்கட் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்