நீண்ட கால தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறந்த வாய்ப்பு

புதிய பிரதமரின் தலைமையில் இலங்கைத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

karunanethy

மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முன்னணி, 45.7 சதவீத வாக்குகளைப் பெற்று 93 ஆசனங்களிலும், ராஜபக்ஷவின் ஐ.ம.சு.மு. 42.4 சதவீத வாக்குகளையும் பெற்று 83 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை வெற்றி பெற்று, இலங்கையில் மூன்றாவது பெரும் கட்சிக்குரிய இடத்தைப் பெற்றிருப்பது முக்கியமானதொரு திருப்பமாகும்.

இந்தத் தேர்தலைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ராஜபக்ஷ இந்தப் பிரதமர் தேர்தலிலும் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளார். எனினும் அவருடைய கட்சி 83 இடங்களிலே வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஜனாதிபதியாக உள்ள மைத்திரிபால சிறிசேன அறிவித்த 20 வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி, இலங்கை விரைவில் ஜனாதிபதி ஆட்சி முறையில் இருந்து மாறி, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் திரும்பும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி, புதிய பிரதமர் எடுக்கும் முடிவுகளை வடிவமைத்திடக் கூடிய நிலையில் அமைந்துள்ளதால், ஈழத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுத்துச் செல்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருக்கின்றதென நம்பலாம். எனவே, இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சம உரிமைகளுடன் கூடிய கண்ணியமான, அமைதியான நல்வாழ்வு அமைந்திட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேற ஆக்க பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய விடியலுக்கு வழி ஏற்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts