‘ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில், ஜனநாயக வழிகளில் அரசாங்கப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களை மீட்கவும் அந்த நிலங்களில் மீளக்குடியேறி வாழ்வதற்குமான உரிமை மறுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை நடாத்திவருகின்றனர். . இனவிடுதலைப் போராட்ட காலங்களில் துன்பமான துயரமான இழப்புக்களையும் அனுபவித்த மக்கள், திடசங்கற்பம் கொண்டு நடாத்தும் போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம்.
ஒரு திட்டமிட்ட அடிப்படையில் அனைவரும் ஒருங்கிணைந்து இலக்கை எட்டும் வரை போராடுவது நியாயமானதேயாகும். இப் போராட்டங்களில் அமைதியான அஹிம்சை வழியிலான வன்முறைகளுக்கு இடமளிக்காத ஜனநாயகவழிப் போராட்டங்களில் நாம் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து, அதற்குச் சொந்தமான மக்களைமீளக் குடியமர்த்துவோம் என ஜனாதிபதியும் அரசாங்கமும் வாக்குறுதி அளித்து இரண்டு வருடங்களாகிவிட்டன. இக் காலத்தில் ஒருசிறு முன்னேற்றம் ஏற்ப்பட்டதே தவிர மக்கள் நிலங்கள் பெருமளவில் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இவ்விடயங்களில், 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கை மற்றும் அங்கத்துவ நாடுகளினால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைத் தீர்மானங்கள் பெருமளவில் நிறைவேற்றப்படாமல் அரசாங்கமும், ஜனாதிபதியும் இழுத்தடிப்புச் செய்துவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைப் போராட அரசாங்கம் நிர்ப்பந்திப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜனாதிபதியும் அரசாங்கமும் உடன் நேரடியாகக் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த மக்களை மீளத் தங்கள் நிலங்களில் குடியேற்ற வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றோம்.
அனைத்துத் தரப்பு மக்கள் சிவில் அமைப்புக்கள் நிலமீட்புக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவதையும் வரவேற்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் நாடாளுமன்றத்திலும் நேரடியாகவும் ஜனாதிபதியிடமும் அராங்கத்திடமும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கவேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பிலும் ஒத்தி வைப்புப் பிரேரணை கொண்டு வந்து விவாதித்துள்ளனர். ஆனாலும் விடிவு இல்லை. எனவே மக்கள் போராட்டங்களை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்கள் சொந்த நிலங்களை விடுவித்து மீளக்குடியிருப்புக்குரித்தான மக்கள் வாழ்வுரிமைப் போராட்டங்களை ஆதரிப்போம். அப் போராட்டங்களின் பங்காளிகளாவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.