நிலக்கடலை பிரித்தெடுக்கும் ஜப்பானிய இயந்திரம் முல்லை மாவட்டத்தில் அறிமுகம்

நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் சேவையை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் புதன் கிழமை (03.04.2014) முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுப்பதில் ஏற்படும் கால விரயத்தையும் பணச்செலவையும் கருத்தில் கொண்டே நிலக்கடலை பிரித்தெடுப்பு இயந்திரங்கள் முல்லையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு ஏக்கரில் பயிரான நிலக்கடலைகளைக் கைகளினால் பிரித்தெடுப்பதற்கு ஆகும் கூலிச் செலவு 15,000 ரூபாவாக இருக்கும் நிலையில், இதே அளவு நிலக்கடலைகளை இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுப்பதற்கு ஆகும் செலவு 4000 ரூபா மாத்திரமே. அத்தோடு, ஒரு நாளில் இயந்திரத்தின் மூலம் இரண்டு ஏக்கர் அளவில் பயிரான நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்க்கா நிறுவனம் ஜப்பானில் இருந்து தருவித்து மூன்று பிரித்தெடுப்பு இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலேயே நிலக்கடலைகள் அதிகளவில் பயிர் செய்யப்படுவதால் முல்லைமாவட்டத்துக்கென இரண்டு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றின் பராமரிப்புப் பொறுப்பு முல்லை மாவட்ட விவசாயத்திணைக்களத்திடமும் மற்றையதைப் பராமரிக்கும் பொறுப்பு முல்லைமாவட்ட ஒன்றிணைந்த பண்ணையாளர்கள் சிக்கனக்கடன் கூட்டுறவுச் சங்கத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் அதனைப் பராமரித்து விவசாயிகளுக்குச் சேவையை வழங்கும் பொறுப்பு வவுனியா மாவட்ட விவசாயத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாதவளசிங்கன் குளப்பகுதியில் நடைபெற்ற நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் அறிமுக நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பாணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், ஜெய்க்கா நிறுவனத்தின் பிரதிநிதி ஒய்சுமி ஆகியோரும் நிலக்கடலை உற்பத்தியாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

1

3

4

5

7

9

Related Posts