நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ; இதுவரை 52 மனித எச்சங்கள் அகழ்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், பத்தாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் திங்கட்கிழமை (15.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 10ஆவது நாளான நேற்று ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னம், திறப்பு கோர்வை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது நேற்றுடன் 52 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், கிராம சேவையாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக விஷேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ கருத்து தெரிவிக்கும் பாேது,

திங்கட்கிழமை (15) மூன்றாம் கட்டமாக தொடர்ந்த கொக்குதாெடுவாய் மனிதபுதைகுழி அகழ்வானது பத்தாவது நாளாவதாக இன்றைய தினம் நடைபெற்றது. இன்றுடன் அநேகமாக மனித புதைகுழியில் கிடந்த எலும்பு தொகுதிகள் முழுக்க மீட்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 52 மனித எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்றையதினம் துப்பாக்கி சன்னம், திறப்பு கோர்வைகள் என்பன மேலதிக சான்றாதார பொருட்களாக பெறப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் இப்புதைகுழி தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மீண்டும் 04.07.2024 மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகி இன்றையதினம் பத்தாம் நாள் அகழ்வுகளுடன் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts