நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் புனரமைக்கப்பட்டு வரும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தினதும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புகையிரத நிலையத்தினதும் நிர்மாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறித்த இரு புனரமைப்புப் பணிகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் நேரில் ஆராய்ந்தனர். முன்பதாக வீரசிங்கம் மண்டபத்திற்கு சென்ற குழுவினர் அங்கு நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டனர்.
நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாதிருந்த இம் மண்டபம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக புதிய வடிவமைப்புடன் புனரமைப்புச் செய்யப்படுகின்றது. அத்துடன் அதன் பிரதான வாயிலும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் புனரமைக்கப்படும் அதேவேளை உட்புறமும் நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் நீண்டகால நோக்கில் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களின் விசேட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்நிலையம் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதன்போது வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.