யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தபோதும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது’ என்று ஒஸ்திரியா அறிவித்துள்ளது.
அத்துடன், ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஏன் அவசியம் என்று தமிழ் மக்கள் கருதுகிறார்கள்’ என யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும் இலங்கைக்கான ஒஸ்திரியா தூதுவர் றைமுன் மயிஸ், கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஒஸ்திரியா தூதுவர், யாழ் ஆயரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடும் போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்ததிற்குப் பின்னரான அரசியல் உறவு நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது. இதன்போது ஆயரிடம் பேசிய ஒஸ்திரிய தூதுவர், ‘யுத்தத்திற்குப் பின்னர் இங்கு பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தபோதும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதற்கு இலங்கை இன்னும பல செயற்பாடுகளை செய்யவேண்டியுள்ளது’ என்றார்.
’13ஆவது திருத்தம் தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது இந்த நிலையில் 13ஆவது திருத்தம் ஏன் அவசியம் என்று தமிழ் மக்கள் கருதுகிறார்கள்’ என்றார்.
இதற்கு பதிலளித்த ஆயர், ’13ஆவது திருத்தச் சட்டத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 13ஐப் பெறுவதன் மூலமே இந்த அதிகாரங்களை நாங்கள் பெறமுடியும்’ என்று பதிலளித்ததாக அவர் தெரிவித்தார்.
‘பெரும்பான்மை இனத்தவர்கள், சிறுபான்மை இனத்தவர்களை சந்தேக கண்ணுடனேயே பார்க்கின்றனர். நல்ல உறவை ஏற்படுத்துவதற்கு பதிலாக இவ்வாறான செயற்பாடுகள் எம்மை எரிச்சலடையச் செய்கிறது’ என்றும் யாழ் ஆயர் இதன்போது எடுத்துரைத்தார்.
‘நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. எங்கள் பிரதிநிதிகளை நாங்கள் தெரிவு செய்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதன் மூலம் எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எங்கள் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு தெரிவிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பென்றே நான் கருதுவதோடு இந்த சபையை அரசாங்கம் நல்ல முறையாகப் பயன்டுத்தினால் நல்லது நடக்கும் என்றே நான் கருதுகின்றேன்’ என்றும் ஆயர் குறிப்பிட்டார்.
‘அத்துடன் இங்கு அபிவிருத்திப் பணிகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் இன்னும் இவை செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது’ என்றார் ஆயர்.
‘கடந்த காலத்தில் இராணுவத்தினரின் பொது மக்கள் மீதான இடையூறுகள் கைது போன்ற செயற்பாடுகள் தற்போது இல்லாதுள்ளபோதும் பொதுமக்களின் காணிகள் பாதுகாப்பு தேவைக்கென்று இராணுவத்தால் சுவீகரிக்கப்படுகின்றன.
இத்தகையை செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும். மீண்டும் ஒரு யுத்தம் வந்துவிடுமோ என்ற வீண் அச்சம் காரணமாக பல்வேறு செயற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகின்றது’ என்றும் ஆயர் சுட்டிக்காட்டினார்.
‘சண்டைதான் வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அதன் தார்ப்பரியத்தினை நாங்கள் அறிந்திருக்கின்றோம். இந்த நாட்டில் ஏனைய இனங்களுக்கு என்ன உரிமையிருக்கின்றதோ அத்தனை உரிமைகளும் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாக இருக்கின்றது’ என்று ஆயர் மேலும் தெரிவித்தார்.