தொல்புரம் பகுதியில் புதிததாக அமைக்கப்பட்ட வயோதிபர் இல்லத்தின் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது, இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் அந்த இல்லத்தின் வாயிலில் இருக்கின்ற இறந்த ஒருவரின் நினைவுக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த படத்தினை எடுத்துச் சென்றனர்.
அத்துடன், நிகழ்வினையும் புகைப்படக் கருவிகள் மூலம் பதிவு செய்தும் கொண்டு சென்றனர்.
குறித்த நினைவுக் கல்லில் காலஞ்சென்ற இளம் வைத்தியநிபுணர் ஒருவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அனுஷ்டிக்கப்படுவதினை, தடுப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று (17) முதலே இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முள்ளிவாய்க்காலில் நேற்று சனிக்கிழமை (17) ஏற்பாடு செய்த பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வினையும் இராணுவத்தினர் தடுத்ததுடன், 3 நாட்களுக்கு எந்த நிகழ்வினையும் நடத்தக்கூடாது என்று தெரிவித்ததாக ரவிகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து குறித்த நிகழ்வு பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவிப் பொருட்களை வழங்கவே என்று தெளிவுபடுத்திய பின்னர் நிகழ்வினை தான் நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.