நிதி நிறுவனங்கள் பொது மக்களின் வீடுகளுக்கு மாலை 5 மணிக்கு பின்னர் செல்ல முடியாது

வடக்கு மாகாணசபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை,

வடக்கு மாகாண சபை இது குறித்த தீர்மானம் ஒன்றை சபை அமர்வின்போது எடுத்திருந்தது. இதனை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், இலங்கை மத்தியவங்கி ஆளுநருக்கும் அனுப்பிவைத்தது.

இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய வங்கி, உரிமம் பெற்ற சகல நிதி நிறுவனங்களும், விசேட லீசிங் கம்பனிகளும், மேற்குறித்த நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று குறிப்பிட்டு கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் வடக்கு மாகாண அவைத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மேலும் இந்த நடைமுறை குறித்து பொலிஸ் தரப்பும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வடக்கு மாகாண சபையிடம் தெரிவித்துள்ளது.

Related Posts