Ad Widget

நிஜத்திலும் ரஜினியின் வார்த்தைகள் மந்திரம்தான்!- ஒரு இயக்குநரின் அனுபவம்

ரஜினி சாதாரணமாக திரையில் பேசும் வார்த்தைகள் கூட பன்ச் வசனங்களாக மாறி பல்லாண்டுகள் நிலைத்து நிற்கின்றன. ரஜினி என்னும் மனிதருக்குள்ள காந்த சக்தியின் அற்புதம் அது…

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ரஜினி வார்த்தைகள் மந்திரம் தான், அவரது குருநாதருக்கு கூட. இதை எடுத்துக்காட்டும் வகையில் ரஜினியின் குருநாதரான இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சிஷ்யர் தாமிரா ஒரு பாலசந்தரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

rajini-bala-chanthar

“எங்கள் இயக்குநர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு மெல்ல மெல்ல நினைவுகள் தப்பிக்கொண்டிருக்கிறது. வெளியே வதந்திகள் அவரைக் கொன்று இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் உறுபசியோடு மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கின்றன. மருத்துவமனை உள்ளே உறவுகளும் சுற்றமும் கையறு நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கண்ணீர்தான் எல்லோருக்குமான பொது மொழியாக இருக்கிறது. மருத்துவர்களின் மௌனம் அச்சுறுத்துகிறது. குறைந்தபட்சம் ஒரு உயிர் தவித்துக்கொண்டிருக்கும் போதே இரங்கல் தெரிவிக்கும் சமூக ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டுமென எண்ணுகிறோம். சமூக ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டுமென எண்ணுகிறோம். அவர் இழுத்து விடும் மூச்சும் அலை பாயும் அவரது கண்களும் எல்லோரையும் உறை நிலையில் வைத்திருக்கிறது. மரண அமைதியும் கண்ணீருமாக இருந்தது அந்த அறை.

அப்போதுதான் தனது இயல்பான வேகத்தோடும் பரபரப்போடும் வந்தார் ரஜினிகாந்த். இயக்குநரின் கைகளை அழுந்தப் பற்றியபடி ‘சார் நா ரஜினி வந்திருக்கறேன்.. உங்கரஜினி வந்திருக்கறேன்’ என்று சொன்ன கணத்தில் விடைபெற்றுக்கொண்டிருந்த அந்த உயிர் அவரது கண்களில் ஒரு பேரொளியாய் ஒன்று திரண்டது. கை விரல்கள் நடுங்க இன்னும் இறுக்கமாக ரஜினியின் கைகளைப் பற்றிக் கொள்கிறார். உதடுகள் குவித்து ஏதேதோ சொல்ல முயற்சிக்கிறார். ஒரு குழந்தையைப் போல அவரது பார்வை இருக்கிறது.

மெல்ல இயக்குநரை தடவிக் கொடுத்து ‘ஒண்ணுமில்ல சார்… உங்களுக்கு ஒண்ணும் ஆகாது…’ என்று சொன்னார் ரஜினி. அது ஒரு மந்திரச் சொல் போலவே இருந்தது.

அதன் பின் இரண்டு நாளைக்குப் பிறகே இயக்குநர் இயற்கையெய்தினார்.

ரஜினி பற்றி இயக்குநர் பல முறை நெகிழ்வாக பேசக் கேட்டிருக்கிறேன். அன்றுதான் அவர்கள் இருவருக்குமான நுட்பமான அன்பை உணர்ந்தேன்.” *

இயக்குநர் தாமிரா பாரதிராஜா, கே பாலச்சந்தர் நடித்த இரட்டைச் சுழி படத்தை இயக்கியவர்.

Related Posts