நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை:சட்டத்தரணிகள் வழக்கு!

காணி அபகரிப்புக்கு எதிராக நடத்தவிருந்த ஒன்றுகூடலை நீதிமன்றம் தடுத்தமை தொடர்பான வழக்கில் அமைதியான முறையில் மக்கள் முன்னெடுக்கும் இவ்வாறான நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை.எனவே நீதிமன்றம் தனது தீர்ப்பை வாபஸ் பெற வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியதை அடுத்து அது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படவுள்ளது.

கடந்த 18ஆம் திகதி நடத்தவிருந்த ஒன்றுகூடல் நிகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை, நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்து நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டத்தரணிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை நிறுத்துமாறு கோரி அது தொடர்பான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று யாழ். பஸ் நிலையம் முன்பாக கடந்த 18ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தது.

அன்றைய தினம் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த யாழ். பொலிஸார் அன்றைய ஒன்று கூடலைத் தடுத்து நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து யாழ். நீதிமன்றினால் வழங்கப்பட்டதெனத் தெரிவித்து கட்டளை ஒன்றை ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தார். அதனால் ஒன்றுகூடல் கைவிடப்பட்டது.

அவ்வாறு தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் பிரிவுகளின்படி இந்த அதிகாரம் இல்லை.

ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய தடைகளை அகற்றும் உத்தரவை வழங்கும் அதிகாரமே நீதிவான் நீதிமன்றுக்கு உண்டு.

எனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் வாபஸ் பெறவேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் எனக் கட்சியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். கட்சி சார்பில் சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், பா.பார்த்தீபன், ஜெ.ஜெயரூபன் ஆகியோரின் அனுசரணையில் கு.குருபரன் வாதாடியிருந்தார்.

Related Posts