நாவற்குழி வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

நாவற்குழியில் உள்ள, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள 250 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை இடம்பெற்றது.

யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். பல வருடங்களாக, அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நாவற்குழியில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், 200 தமிழ்க்குடும்பங்களுக்கும் 50 சிங்கள குடும்பங்களுக்குமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

“நாவற்குழியில் சிங்கள மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட கூடாது. தமிழ் மக்கள் காணிகளற்று இருக்கும் போது, சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்க கூடாது” என, அண்மையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts