நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது சட்ட ரீதியான விடயம் என்பதால் அதனைத் தாம் சட்ட ரீதியாகவே அணுகவுள்ளார் என முதலமைச்சர் மேலும் கூறினார். நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளன.
இவர்களுக்கான காணிகள் அண்மையில் அளவீடு செய்யப்பட்டுப் பங்கிடப்பட்டுள்ளன.
ஆயினும் சிங்களக் குடும்பங்கள் குடியமர்ந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களை சற்றுத் தொலைவில் உள்ள புதுக்குடியேற்றத் திட்டத்தில் தங்கியுள்ள தமிழ் மக்களுடன் இணைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை, சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் அளவீடு செய்யப்படவில்லை.
இதன் காரணமாக தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இது சட்ட ரீதியான விடயம். ஒரு பகுதியினருக்குக் காணியை அளந்து கொடுத்துவிட்டு மற்றைய பகுதியினருக்குக் காணியை அளந்து கொடுக்காமல் இருப்பதே சட்டத்துக்குப் புறம்பான செயல். ஆகவே இது தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.
இந்தப் பகுதியில் எந்த அடிப்படையில் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள் என்பது தொடர்பாகவும் சட்டரீதியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை இப்பொழுதுதான் எனக்குத் தெரியவந்துள்ளது. வடக்கு மாகாண சபையின் முதல் கூட்டத்தையே இன்னமும் நாம் நடத்தவில்லை. கால அவகாசம் எனக்குத் தரப்பட்டால் இது தொடர்பாக என்னால் பரிசீலித்துப் பார்க்க முடியும் என்றார்.