Ad Widget

நாளை முல்லைத்தீவில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. செம்மலை மகா வித்தியாலயத்தில் நாளை திங்கட்கிழமை (26.12.2016) பி.பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொள்ள உள்ளார்.

விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாணசபை பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஆ.சி.து.ரவிகரன், க.சிவநேசன், யாசீன் ஜவாஹிர், ஆ.புவனேஸ்வரன், அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதன்போது ‘அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழர்களின் பாரம்பரிய அறிவு’ என்ற கருப்பொருளில் யாழ் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் சிரேஷ;ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜாவின் விசேட உரை இடம்பெற இருப்பதோடு, யாழ் ராகஸ்வரம் இசைமன்றத்தால் பேரிடர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் ‘இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்’ என்ற நாடக அரங்கமும்; நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கரையோர மாவட்டங்களை 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி கடற்கோள் தாக்கியதில் நாற்பதாயிரம் வரையான உயிர்கள் பலியாகியதோடு, பெரும் சொத்தழிவுகளும் ஏற்பட்டது. கடற்கோள் தாக்கிய தினமான டிசம்பர் 26ஆம் திகதி வடமாகாண இயற்கைப்பேரிடர் தணிப்புத்தினமாக வடமாகாணசபையால் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, ஆண்டுதோறும் வடமாகாண சுற்றாடல் அமைச்சு இதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றது. கடந்த ஆண்டு இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts