மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் நடத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதனை சாதாரண விடயமாக பார்க்கமுடியாது பாதுகாப்பு செயலரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் வடக்கில் நடந்தால் நாம் போராடாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தார் அதன் அழைப்பாளர் லஹிரு வீரசேகர.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நகருக்கு அண்மித்த குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த சம்பவம் விபத்து என அறிவிக்கப்பட்ட போதும் பின்னர் மரண பரிசோதனைகளின் பிரகாரம் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பணிநீக்கமும் செய்யப்படுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ள இச்சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
2012ஆம் ஆண்டு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடத்தப்பட்ட பேரணியின் போது களனி பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இதேபோன்று தான் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதும் அது விபத்து அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதையொத்த சம்பவமாகவே யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தையும் பார்க்கவேண்டியுள்ளது. பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள நிலையில் பொலிஸ் கட்டமைப்பை நிருவகிக்கும் அரசாங்கமே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்று பதில் கூறவேண்டியுள்ளது.
அதனடிப்படையில் உயிரிழந்த குறித்த இரு மாணவர்களுக்காக நீதி கோரி நாம் நாடளவிய ரீதியில் போராடவுள்ளோம். குறிப்பாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அந்த பல்கலைக்கழகங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.
இந்தபோராட்டத்தில் இன,மத, மொழி பேதமின்றி எமது சகோதரர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவ சகோதரர்களும் தயாராகவுள்ள நிலையிலேயே நாளை திங்கட்கிழமை முதல் போராட்டத்திற்கான அழைப்பு எம்மால் விடுக்கப்படுகின்றது என்றார்.