நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!!
வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.
குரு பெயர்ச்சி பற்றி சொல்லும் பொழுது
ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும்
என்பது பழம் பாடல்.
மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை. ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும்.
கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.
மேஷம்:
மேஷம் ராசி நண்பர்களே இது வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம்.
இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 12 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும்.
பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும்.தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு, மனை வாங்கும் வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும்.
தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அஷ்டமத்து சனியால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.
குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபம் ராசி நண்பர்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்கு வருகிறார் ஏற்கனவே 9 க்கும் 10 க்கும் அதிபதி ராசியை பார்த்ததால் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடத்துடன் காலத்தை ஓட்டினீர்கள். புது காரியங்கள் தொட்டது துலங்க வில்லை.
ராசிக்கு அட்டாமாதிபதி குரு சுக ஸ்தானமான 4 ல் இருந்ததால் உடலும் மனசும் வருத்தியது. போகாத கோயில் இல்லை.பார்க்காத வைத்தியம் இல்லை.இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்கு வியாஜ்யங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம்.சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம்.
ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழது தான் கிடைக்க போகிறது.
கன்னி ராசியில் குரு பகை என்பார்கள். ராசிநாதன் புதன் தான் பகையே தவிர அதில் உள்ள முன்று நட்சத்திரங்களுக்குறிய அதிபதிகளான சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருமே குருவுக்கு நட்பே. அதனால் உயர்வான முன்னேற்றத்தை தரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள்.
கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த காலம் ஆடி 18 க்குமேல் வருகிறது.13 மாதமும் நன்மையே. 80 சதவிதம் நன்மையே நடக்கும்.
பரிகாரம்:
புதன் பெருமாள் அம்சம் அவருடைய வீட்டில் குரு இருப்பதால் சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதி இருக்கும் கோயிலில் உள்ள மேதா தெட்சினாமூர்த்தியை வணங்கவும்.
மிதுனம்:
மிதுனம் ராசி நண்பர்களே! இதுவரை முன்றாம் பாவத்தில் மறைந்த குருபகவான் ஆடி மாதம் முதல் தாங்கள் ராசி நாதன் வீட்டிற்க்கு வருகிறார்.
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் அதுபடி இந்த குருபெயர்ச்சி அமையுமா.? இது பொதுவானது தான்.
ராசிக்கு 4 ல் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர். அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம்.
பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். சில ஜாதகர்கள் கல்யாணம் ஆகியவுடன் தாம் சம்பாதிக்கும் பணத்தை மனைவி வீிட்டாருக்கு செலவழித்து தங்களுடைய தாய் தந்தை சகோதரிகளிடம் பகையை பெறுவார்கள். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதி ஆவதால் அவ்வாறு பிரச்சனைகள் வரலாம்.
பத்தாம் வீட்டை அந்த பாவாதிபதி குருவே பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும்.
12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும்.
கேந்திரத்தில் சுபகிரகம் வரும் கேந்திராதிபதி தோஷத்தை தானே தர வேண்டும் சந்தேகம் வரலாம். 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள்.சிலருக்கு சொந்த வீடு சொகுசா இருக்கும். பணி நிமித்தம் காரணமாக வாடகை வீட்டிற்கு போவது இது தான் பாதக பலன்.
பரிகாரம்:
இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது.
கடகம்
கடகம் ராசி நண்பர்களே! இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரும்.
இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது. குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள் அல்லது மறுவாழ்க்கை அமையும். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும்.
சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள்!.
பரிகாரம்
கடக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் அம்பாள் அனுகிரகம் பெற்றவர்கள் திங்கள் கிழமைகளில் அம்பாள் வழிபாடும் குருபகவானை தரிசிப்பதும் நல்லது.பௌர்ணமி விரதம் இருப்பதும் நன்று. கடகராசி லக்னத்தில் பிறப்பவர்கள் ஓரு முறையாவது கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது நல்லது.!!
சிம்மம்:
சிம்மம் ராசி நண்பர்களே இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். தனகாரகன் குரு தனஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம்.
பொதுவாக கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு குரு யோகாதிபதி எனவே குருவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் ஆனால் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். அவரின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்க போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும்.வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும்.
திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழது.இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும்.சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். மொத்ததில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும்.
வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் பிரதோச வழிபாடு செய்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த குருபகவான் ஓருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்று பாடல் ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் 4 க்கும் 7க்கும் அதிபதியான குரு ராசிக்குள் வரும் பொழது புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். ஜென்ம ராசிக்குள் குருவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள். என்ன தான் முயற்சி செய்தும் என்ன தான் உருண்டு புரண்டு பாடுபட்டாலும் இது வரை கருனை செய்யாத தெய்வம் இப்பொழது கருணை மழை காட்டப்போகிறது அது 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி.
பரிகாரம்:
புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யலாம். 70 சதவிதம் நன்மையை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
துலாம்:
துலாம் ராசி நண்பர்களே இது வரை லாபஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் 12 ஆம் பாவமான விரையம் மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார்.
பொதுவாக துலாம் ராசி துலாம் லக்னத்துக்கு குரு வலுபெற கூடாது குரு பகவான் 3க்கும் 6 க்கும் இருமறைவு ஸ்தானதிபதியாவர் 6க்குடையன் 12 ல் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும் பொதுவாக மீனம் தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார் அதே போல துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம்.
குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் கோர்ட் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் வண்டி வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். 6 ஆம் இடத்தை பார்க்கப் போவதால் ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியமால் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும்.
6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த நோய், நொடி,சீக்கு பிணி கேடுகள் மறையும். மருந்து மாத்திரை மருத்துவமனை செலவுகள் விலகும். உத்தியோகம் சம்பந்தமாக கோர்ட் வழக்குகள் இருந்தால் சாதகமாக தீர்ப்பால் இதுவரை கிடைக்க வேண்டிய பணங்கள் கைக்கு வரும்.
இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள். 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஏன் என்றால் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு 8ம் இடம். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். மொத்தத்தில் 70 சதவிதம் நன்மைகள் நடக்கும்.
பரிகாரம்:
பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு பச்சரிசி தானமாக கொடுப்பது நல்லது. யானைக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. வியாழக்கிழமை பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசி நண்பர்களே! ஆடி மாதம் முதல் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்திற்க்கு மாறுகிறார். ஏற்கனவே கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. அதுவும் தகப்பன் காரகன் சூரியன் தை மாதம் மகரத்தில் வந்த பொழது சனியின் முன்றாம் பார்வை பெற்றவுடன் பலர் பெற்றோருக்கு கருமம் செய்தார்கள்.
உங்க ராசிக்கு 2 க்கும் 5க்கும் உடைய குரு உங்க ராசிக்கு முழுமையான சுபராவார்.அவர் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.
பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம்.
பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். அடுத்தது ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார்.களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும்.
பரிகாரம் :
முருகப்பெருமானையும் தெட்சிணாமுர்த்தியையும் வணங்குவது நல்லது. மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் கிடைக்கும்
தனுசு:
தனுசு ராசி நண்பர்களே கடந்த ஓரு வருஷமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு கர்மா ஸ்தானம் என்ற இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.ராசிநாதன் குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா?. சாதகமா?. என்றால் 9 ல் இருந்த குரு சாதகமான நன்மைகளை செய்தார் என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள்.
கோசாரத்தில் ஏழரை சனி இருப்பதால் கடந்த காலங்களில் ஏமாற்றம் சஞ்சலம் விரக்தி வேதனை அனுபவித்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக நல்ல பலனை தரும். குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். ஜாதகத்தில் தனகாரகன் குரு தனஸ்தானத்திற்கு 9 ல் வருகிறார். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும்.
இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும்,ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும்.செய் தொழில் வளர்ச்சி பெறும் 60 சதவிதம் நன்மையே நடைபெறும்.
பரிகாரம்:
சிவன்கோயிலில் உள்ள தெட்சிணாமுர்த்தி,மற்றும் நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது.
மகரம்:
மகரம் ராசி நண்பர்களே இது வரை அஷ்டமத்து ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார்.
பொதுவாக ராசிக்கு 3, 12, க்குடையவர் குரு. ராசிக்கு நன்மை செய்யாத கிரகம் குரு. இவர் மறைவு ஸ்தானத்தில் வரும் பொழது நன்மைகளை செய்வார் திரிகோனத்தில் வரும் பொழது நன்மையை செய்வாரா?. நல்லதையும் செய்வார் கெடுதலையும் செய்வார்.
ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம்.
‘ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு’ என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும்.இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும்.
முன்றாம் பாவத்திற்கு பாவாதிபதி குருவே பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். மன ஆழுத்தம் அச்ச உணர்வு ஆகியவை நீங்கும்.
அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் எக்கசக்கமா இருக்கே என்று உறவினர்கள் குழைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.மற்றபடி கவலைபட வேண்டாம். 75 சதவிதம் நன்மைகள் நடக்கும்
பரிகாரம்:
பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும்.சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசி நண்பர்களே கும்பம் ராசிக்கு இது வரை ஏழாம் பாவத்தில் இருந்த குரு ஆடி மாதம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம்தானே யோகத்தை அனுபவித்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் 75 சதவிதம் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் கிணற்றுக்குள் போட்ட கல்லை போல செயல்பாடுகள் முடங்கி தான் இருந்தது. கும்பத்திற்கு 8 ல் வரும் பொழுது குருபகவான் கெடுதலை செய்ய மாட்டார்.
கன்னி ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும்.
பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.புது வீடு கட்டி குடிபோவார்கள்.சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். 8ல் உள்ள குரு உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை.
பரிகாரம்:
வியாழக்கிழமை முருகப்பெருமானையும் கூடிய குருபகவானையும் வணங்கலாம். மொத்ததில் 70 சதவிதம் நல்லது நடக்கும்.!
மீனம்:
மீன ராசி நண்பர்களே! கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார்.அஷ்டமத்து சனியில் கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை!. ஆனால் கடந்த ஆண்டு பட்ட பாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது.
பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கி போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களை தரும்.!! ஆனால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது.
குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருஷங்களாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். பகைமைகள் மாறும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.
ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார்.
பகை வீட்டில் அமரும் குரு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.பிரதோஷ காலங்களில் நந்திக்கு சந்தனம் வாங்கி கொடுப்பது நல்லது.!!